மகிழ்ச்சியான செய்தி... கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை விட அதிக திறன் வாய்ந்த ஸ்புட்னிக்-வி..!

By Thiraviaraj RMFirst Published May 15, 2021, 10:59 AM IST
Highlights

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளை விட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது அதிக செயல்திறன் (91.6 சதவீதம்) கொண்டது  என்கிறார்கள்.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை ரூ. 948, 5 % ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ. 995 உள்நாட்டு உற்பத்தியில் விலை குறையும். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை 948 ரூபாயாக இருக்கும் என அதனை இறக்குமதி செய்துள்ள இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் விலைக்கும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் முதலாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் போட தடுப்பூசி இல்லாத அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. மோடி அரசின் கவனக்குறைவும் மெத்தனமும்தான் இந்த நிலைக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. 

காரணம். இரண்டாம் அலை என்ற ஒன்றே இந்தியாவுக்கு வராது என்று மோடி அரசு நினைத்து இந்தியாவில் பெரிய அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. ஆனால் உள்ளூர் மக்களுக்கு போட தடுப்பூசி இல்லை. இப்போது ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி 15 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள ரெட்டி இன்ஸ்டியூட்டிற்கு இந்த தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையையும் பெற்று வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு 5% ஜி.எஸ்.டி வரி போட்டு தடுப்பூசியின் விலை ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்புக்கு இந்திய அரசு ஒதுக்கிய 35 ஆயிரம் கோடி ரூபாயில் பெருந்தொகையை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ள மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. ஆக்சிஜனும் வழங்கவில்லை. மருந்துகளும் வழங்கவில்லை. இந்திய ஒன்றியத்தில் மாநில அரசுகள் தங்களின் அதிகாரம் தொடர்பாக மிகப்பெரிய கேள்விகளை கொரோனா பெருந்தொற்று உருவாக்கியுள்ளது.

 இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளை விட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது அதிக செயல்திறன் (91.6 சதவீதம்) கொண்டது  என்கிறார்கள்.

click me!