கடவுளுக்காக எந்த விமர்சனத்தையும் சந்திக்க திமுக அரசு தயார்... தெறிக்கவிடும் அமைச்சர் சேகர்பாபு.!

By Asianet TamilFirst Published Sep 25, 2021, 8:58 PM IST
Highlights

கோயில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்துக்கு பயன்படும் எனில் எந்த விமர்சனத்தையும் சந்திக்க திமுக அரசு தயார் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 

மதுரையில் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மீனாட்சி அம்மன் கோயிலில் 2018-ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. அதில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஸ்தபதிகளுக்கு பல முறை டெண்டர் அறிவித்தும் யாரும் டெண்டர் எடுக்கவில்லை. எனவே, டெண்டரை ஒப்படைப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் அந்தப் பணிகளை 3 ஆண்டுகளுக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகள் காரணமாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதில் ஆகம விதி சிக்கல் உள்ளதா என ஆராயப்படும். பக்தர்கள் கருத்தும் கேட்கப்படும். 
சோளிங்கர், அய்யர் மலை கோயில்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை பயன்பாட்டுக்கு வரும். பின்னர் மேலும் 5 கோயில்களுக்கு ரோப்கார் சேவையைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள கோயில் நிலங்கள் ஒன்றுகூட கடந்த ஆட்சியில் மீட்கப்படவிலை. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 
கோயில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த பல்வேறு ஆபரணங்கள் கடந்த 9 ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் கிடக்கின்றன. அதில், தெய்வங்களுக்கு பயன்படுவதை நேரடியாக பயன்படுத்தவும், பயன்படுத்த முடியாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் வைப்பு நிதியை கோயில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை 3 மண்டலங்களாக பிரித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகள் பிரிக்கப்பட்டு உருக்கும் பணிகள் நடைபெறும். கோயில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்துக்கு பயன்படும் எனில் எந்த விமர்சனத்தையும் சந்திக்க தயார்.” என்று சேகர்பாபு தெரிவித்தார்.

click me!