
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கருப்புக் கொடி போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் முன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 9 மாதங்களாக வேளாண் விரோதச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் பிரதமர் மோடி கவலைப்படவில்லை. அம்பானி, அதானியின் நலனை மட்டுமே அவர் பார்க்கிறார்.
தற்போது விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கொரோனா காரணமாக 20 கோடிப் பேர் வேலை இழந்துவிட்டனர். அந்த மக்களைப் பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. மின்துறை உள்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்தியில் உள்ள மோடி அரசு முயற்சி செய்கிறது. இதையெல்லாம் கண்டித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது.
புதுச்சேரியில் பாஜகவின் பினாமி அரசாக என்.ஆர்.காங்கிரஸ் அரசும் அதன் முதல்வர் ரங்கசாமியும் உள்ளார். அவர் எல்லாவற்றையும் பாஜகவிடம் கொடுத்துவிட்டு அடிமை ஆட்சி நடத்துகிறார். மத்திய அரசின் திட்டங்களை முன்பு எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது அதை ஆதரிக்கும் மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியிடம் சரணாகதி அடைந்துள்ள அவர்கள், மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற துடிக்கிறார்கள்.” என்று நாராயணசாமி தெரிவித்தார்.