இந்த எதிர்க்கட்சிகளை வைத்து 2024-இல் பாஜகவை அசைக்கக்கூட முடியாது.. கழுவி ஊற்றும் பிரசாந்த் கிஷோர்.!

By Asianet TamilFirst Published Jan 25, 2022, 7:08 AM IST
Highlights

“2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது சாத்தியமே அல்ல. நாடாளுமன்றத் தேர்தலின் வெள்ளோட்டம் என அறியப்படுகிறது உத்தரப் பிரதேச தேர்தல். ஒருவேளை உ.பி.யில் முடிவு வேறு மாதிரி வந்தால் மட்டுமே 2024-இல் பாஜகவை வீழ்த்துவது சாத்தியமே."

இப்போதுள்ள எதிர்க்கட்சிகளை வைத்துக்கொண்டு பாஜகவை வீழ்த்துவது சாத்தியமா என்பது சந்தேகம்தான் என்று தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவில் உத்தரப்பிரதேசம். பஞ்சாப் என மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஆவலாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், 2024-ஆம் ஆண்டு தேர்தலைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், “2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது சாத்தியமே அல்ல. நாடாளுமன்றத் தேர்தலின் வெள்ளோட்டம் என அறியப்படுகிறது உத்தரப் பிரதேச தேர்தல். ஒருவேளை உ.பி.யில் முடிவு வேறு மாதிரி வந்தால் மட்டுமே 2024-இல் பாஜகவை வீழ்த்துவது சாத்தியமே. ஆனால், இப்போதிருக்கும் எதிர்க்கட்சிகளை வைத்துக்கொண்டு சாத்தியமா என்பது சந்தேகம்தான். 

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எனக்கு ஒரு வலுவான எதிரணி தேவை. பாஜக இந்துத்துவா, தேசியவாதம், மக்கள் நலன் என்ற தளங்களில் வலுவாக நின்று கொண்டிருக்கிறது. இந்த மூன்றில் இரண்டு அம்சங்களிலாவது நாம் பாஜகவை வீழ்த்த வேண்டும். காங்கிரஸ் கட்சியோடு நான் ஐந்து மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், பலன் இல்லை. நானும் காங்கிரஸும் இணைந்து செயல்பட வேண்டும் என்றே மற்ற கட்சிகள் எல்லாம் விரும்பின. ஆனால் அதற்கு பரஸ்பரமாக ஒரு நம்பிக்கை தேவை. அது காங்கிரஸில் ஏற்படவில்லை. நான் எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் ரசிகன். அக்கட்சியின் கொள்கை, எனக்கு ஏற்புடையது. இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி என்பதே சாத்தியமே இல்லை.

ஆனால், அதற்காக காங்கிரஸ் தலைமையில்தான் எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும் என்ற நிர்பந்தமும் கிடையாது. பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய உத்வேகம் தேவைப்படுகிறது.” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். குஜராத் மாடல், மோடி அலை என்ற சொலாடல்களை எல்லாம் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டதே பிரசாந்த் கிஷோர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!