தேர்தல் ரேஸில் முந்தும் திமுக கூட்டணி... புதிய கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்கள்..!

By Asianet TamilFirst Published Apr 6, 2019, 9:03 AM IST
Highlights

தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி முந்துவதாக தந்தி டி.வி. கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டாணி வெற்றி பெறும் என்பது பற்றி தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 29,500 பேரிடம் தகவல்களைச் சேகரித்து இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் கிடைத்த தவல்களின் அடிப்படையில் 10 தொகுதிகளுக்கான முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. 
முதல் கட்டமாக திருவள்ளூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், வட சென்னை, ஆரணி, திருச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் திருவள்ளூர் தொகுதியில் மட்டும் அதிமுக வெல்ல வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், வட சென்னை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை,  நாகப்பட்டினம், பெரம்பலூர், ஆரணி ஆகிய தொகுதிகளில் திமுக - அதிமுக கூட்டணி இடையே இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கிறது கருத்துக்கணிப்பு முடிவுகள். ஆனால், இந்த 4 தொகுதிகளிலும் திமுக 1 முதல் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் முந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீதம் குறைவாக இருப்பதால், இந்தத் தொகுதிகளை இழுபறியாகக் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்கள். அமமுக கட்சி திருச்சி தொகுதியில் கடும் போட்டியை அளிக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எஞ்சிய தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளிவர உள்ளன.

click me!