
அமைச்சர் ஜெயக்குமாரை “நட்டு” கழன்றவர் என தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தினகரனின் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வம் அணியினரை இணைத்துக்கொண்டு செயல்படும் பழனிசாமி தலைமையிலான அரசு மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என கேள்வி எழுப்பினார்.
சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பழனிசாமி அரசு பயப்படுகிறது. அதனால்தான் பரோலில் வந்த சசிகலாவுக்கு கடுமையான நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, யாரையும் சந்திக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை தமிழக அரசுதான் விதித்ததாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு மற்றும் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றின் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரைதான் இந்த ஆட்சி நீடிக்கும் என ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கத்திற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார். அதன்பிறகு சட்டமன்றத்துக்குள் வந்தபிறகு தாங்கள் யார் என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
கடைசியாக அமைச்சர் ஜெயக்குமாரை தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக விமர்சித்தார்.
“நட்டு” கழன்றவர் ஜெயக்குமார். அவர் என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை. சசிகலாவின் காலில் விழுந்து கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்திய ஜெயக்குமார், அன்று பதவிக்காக சசிகலாவின் காலிலே விழுந்தார். இன்று அவரை கெட்டவர் என விமர்சனம் செய்துவருகிறார். ஜெயக்குமார் நட்டு கழன்றவர்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமாரை தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக தாக்கினார்.