
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நேற்று முதல் நாடு முழுதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், பட்டாசுக்கு 28 சதவீதம், தீப்பெட்டிக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை அழியும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பட்டாசுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத வரியை குறைக்க வேண்டும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அமைச்சர் ஜெயக்குமார், பட்டாசு தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஆதரவு குரல் கொடுப்போம் என்று கூறினார்.
ஜி.எஸ்.டி. வரியால் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்போது தம்பிதுரை கூறினார். ஜி.எஸ்.டி. வரியால் சில நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு என்றார்.
ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு உறுதி அளித்த பிறகே தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது என்றும் தம்பிதுரை எம்.பி. கூறினார்.