
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பேனர்களில் வாத்தியார் படமும் இல்லை, கழகம் காத்த அம்மா படமும் இல்லை, ஆட்சியைக் காத்து அதிகாரத்தை தந்த கழக பொது செயலாளர் படமும் இல்லை என்று தொண்டர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் கடந்த 30 ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. நூற்றாண்டு விழாவையொட்டி, இன்னிசை நிகழ்ச்சி, யோகா, பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. விழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கம் வண்ணம், மதுரையில் 7 இடங்களில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தன.
விழாவில், அமைக்கப்பட்டிருந்த பேனர்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் இல்லாதிருந்தது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி அருகே பல இடங்களில் அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த பேனர்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படம் இல்லாது இருந்தது. அதுபோலவே சசிகலா படமும் இல்லாது இருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி அதிமுக தொண்டர் ஒருவர், கழகம் தந்த வாத்தியாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம். நூற்றாண்டு விழா குறித்த பேனரில் தலைவர் படமும் இல்லை, கழகத்தைக் காத்த அம்மா இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை... அவரின் படமும் இல்லை. பழனிசாமிக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுதத கழக பொது செயலாளர் சசிகலாவின் படமும் இல்லை என்று வேதனை தெரிவித்தார். இது குறித்து யாரிடம் நியாயம் கேட்பது என்றும் கேள்வி எழுப்பினார்.
தலைமை செயலகத்திற்குள்ளே அம்மா இருந்தால் செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்ன அதே உதயகுமார்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் அந்த தொண்டர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது, வெறும் தொண்டர்கள் மட்டுமே நிறைந்திருக்க காணும் இடம் எல்லாம் காலியாக உள்ள நாற்காலியே அதிகம் காணப்பட்டது.
கட்சி பேனர்களில் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா படமும் இல்லை என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், விழாவில் முதலமைச்சர் பழனிசாமியின் பேச்சைக் கேட்க பொதுமக்களுக்காக போடப்பட்ட நாற்காலிகளும் காலியாகவே உள்ளது என்று அதிமுக தொண்டர் ஒருவர் வேதனையுடன் கூறி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் மேம்பால பணிகள் மற்றும் குடிநீர் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரில், பெரியார், எம்.ஜி.ஆர்., படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், ஜெயலலிதா படம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பேனர்களில் தற்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் படங்கள் இல்லாது வருவது தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.