
சிந்தாந்த அடிப்படையிலான இந்த போரில் (குடியரசு தலைவர் போட்டி) எனக்கு மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார் கூறியுள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசு தலைவர் வேட்பாளர்கள் ராம்நாத் கோவிந்த், மீராகுமார் நேற்று தமிழகம் வந்து ஆதரவு கோரினர்.
நேற்று காலை 11 மணியளவில் வந்த பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், அதிமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.
இதன் பின்னர், எதிர்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார், நேற்று மாலை சென்னை வந்தார். மீராகுமார், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்த நிலையில் மீரா குமார், புதுச்சேரி சென்றார். முன்னதாக கிண்டியில் தனியார் ஓட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சித்தாந்த அடிப்படையிலான இந்த போரில் எனக்கு மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்றார்.
எங்களுக்கு பாஜகவின் 17 எதிர்கட்சிகள் ஆதரவு தருகிறார்கள் என்றும், எனவே வெற்றி பிரகாசமாக உள்ளது என்றும் மீரா குமார் கூறினார்.
பின்னர், குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார், சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக புதுச்சேரி சென்றார். புதுச்சேரிக்கு சென்ற மீரா குமாரை, முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்றார். புதுவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மீரா குமார் கலந்து கொண்டு, ஆதரவு கோருகிறார்.