
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது.
ஆனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது. மேலும், அவர்களில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை மின் விளக்கு, சசிகலா அணிக்கு ஆட்டோ ரிக் ஷா சின்னம் ஒதுக்கியது.
இதனை ஏற்று கொண்ட சசிகலா தரப்பினர், சிறிது நேரத்தில் அந்த சின்னம் எங்களுக்கு வேண்டாம். தொப்பி சின்னத்தை ஒதுக்கும்படி கூறினர். அதன்படி அவர்களுக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டது. மேலும், அதிமுகவின் பெயரை குறிப்பிட கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதுகுறித்து மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட சின்னம் இரட்டை இலை.
தற்போது, தேர்தல் ஆணையம் தற்காலிகமாக தொப்பி சின்னத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் டி.டி.வி.தினகரன், போட்டியிட்டு ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெறுவார்.
எங்களுக்கு தான், இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதனை யாரும் முடக்க முடியாது. இது தற்காலிகமாக நடந்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் சென்று, இதனை மாற்றி கொள்வோம்.
ஆனால், அதற்கான நேரம் இல்லை. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காலிக சின்னமான தொப்பை கொண்டு டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டிகிறார். சசிகலாவின் ஆசியும், ஆதரவும் பெற்ற டி.டி.வி.தினகரனை யாராலும் வெல்ல முடியாது.
அதிமுகவையும், இரட்டை இலையையும் பலர் முடக்க நினைத்தார்கள். இதனால் பல சோதனைகள் ஏற்பட்டுள்ளன. அவை அனைத்தையும் எம்ஜிஆரும், ஜெயலலிதவும் தைரியமாக நேருக்கு நேர் சந்தித்தனர். அதனால், பல வெற்றிகளை கண்டனர்.
தொப்பி சின்னம் கிடைத்ததில் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம். காரணம், எம்ஜிஆர் பல படங்களில் தொப்பி அணிந்து நடித்துள்ளார். அது உங்களுக்கே தெரியும். அதை யாரும் மறக்க முடியாது. இதனால், எங்களின் வெற்றிக்கு பின் அதிமுக மட்டுமல்ல எம்ஜிஆர் அணிந்த தொப்பியும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.