
கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்கவும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேசிய தகவியல் மையத்தின் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்டம் ஏற்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்கவும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேசிய தகவியல் மையத்தின் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தனித்தனி வலைத்தளம் உருவாக்கப்பட்டு அதில் திருக்கோயில் சொத்துக்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான விலை மதிப்பற்ற விக்கிரகங்களை பதிவேற்றம் செய்து ஆவணப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், திருக்கோயில்களின் சொத்துக்களிலிருந்து பெறப்படும் குத்தகை, வாடகைதொகைகளுக்கு திருக்கோயில்களில் அளிக்கப்பட்டு வந்த அச்சு ரசீதுமுறை ரத்து செய்யப்பட்டு, மேற்கண்ட இனங்களுக்கான ரசீதுகள், இணையவழி மூலமாகவும், திருக்கோயில் அலுவலகங்களிலும், பொது வசூல் மையங்களிலும், கணினி வழி ரசீது அளிக்கப்படும் திட்டம் கடந்த ஆண்டு அக்.8ம் தேதி முதல் துவக்கப்பட்டது.
தற்போது அனைத்து திருக்கோயில் சொத்துக்களின் குத்தகைதாரர்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு இணைய வழி மூலமும், வசூல் மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் வழங்கப்படும் குத்தகை, வாடகைக்தொகை, நாள்தோறும் ஆணையர் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால், ரூ.160 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருக்கோயில்களில் உள்ள கட்டணச் சேவைகள் அனைத்தும், இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளவும், திருக்கோயில் கட்டணச்சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீதுகள் பெறுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் வலைதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம், அதிக பக்தர்கள் வருகை தரும் 550 முக்கியத் திருக்கோயில்களில், அர்ச்சனைக் கட்டணம், அபிஷேகக் கட்டணம், திருமணக் கட்டணம், பரிகாரக் கட்டணம், சனிப்பெயர்ச்சிக் கட்டணம், குருப்பெயர்ச்சிக் கட்டணம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 255 வகையான சேவைகள், இணையவழி மூலம் முன்பதிவாகவும், திருக்கோயில் கட்டணச் சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும், ரசீதுகள் வழங்கப்படும். இவ்வாறு இணையவழியிலும், திருக்கோயில்களில் கணினி மூலம் வழங்கப்படும் ரசீதுகளில் கியுஆர் கோடு எனப்படும் விரைவு பரிசோதனை குறியீடுகள் இருக்கும்.
இந்த குறியீடுகளை, திருக்கோயில்களில் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இணையவழியில் கட்டணத்தை செலுத்தியவுடன் ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ரசீதுகள் பக்தர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பக்தர்கள் தொகையை செலுத்தியதற்கான சரிபார்ப்பு பட்டனைத் தேர்வு செய்து பக்தர்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையவழி மூலம் முன்பதிவு செய்பவர்கள் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரசீதினை உபயோகம் செய்தால் போதுமானது. சேவைக்கட்டணம் ரசீது பெறுவது தொடர்பாக குறைபாடுகள் இருப்பின் அதனை ஆணையர் அலுவலக உதவி மைய தொலைபேசி 04428339999 எண்ணிற்கு தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு சேவைகள் அனைத்தும் இணையவழி மூலமாகவும் மேற்கொள்வதால் திருக்கோயில் நிர்வாகத்தால் சேவைக் கட்டணச்சீட்டு ஒளிவு மறைவற்ற வகையிலும் இருப்பதோடு தொலைதூரப் பக்தர்கள் தங்களது ஆன்மீக பயணத்திட்டத்தினை முன்கூட்டியே செய்து காலவிரயத்தை தவிர்க்க முடியும். மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்த்து சிரமமின்றி நிறைவான தரிசனத்தை பெறலாம் என்று தெரிவித்தார்.