
பொது நுழைவு தேர்வு ரத்து செய்ய வேண்டும்
இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டில் இளநிலை படிப்புகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மூலம் தான் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பொது நுழைவுத் தேர்வு மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் சேர்க்கையை குறைக்கும் என்றும் பயிற்சி மையங்களில் புற்றீசல்போல உருவாகும் அபாயம் ஏற்படும் என தெரிவித்தார் எனவே இளநிலை படிப்புகளுக்கு மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்
முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது பேசிய பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன்,
மத்திய அரசு, தமிழக மாணவர்களுக்கு எதிரானது போன்ற மாய தோற்றத்தை மாநில அரசு ஏற்படுத்தி வருகின்றது என குறிப்பிட்டார். மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று ஏற்கனவே தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். தற்போது உள்ள நிலையில் 2 வயது குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். எனவே மாநில அரசு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமே தவிர இதுபோன்ற சூழலில் முட்டுகட்டை போடுவதை மாநில அரசு நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
நீட்-கியூட்-அவுட்
இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொது நுழைவுத் தேர்வுக்கு கேரளாவில் எந்த எதிர்ப்பும் இல்லை. நான் அதற்குள் போக விரும்பவில்லை.மாநில அரசு பல்கலைக்கழகம் விரும்பினால் சேர்த்து கொள்ளலாம் என UGC அறிக்கையில் உள்ளது. நீட் தேர்வு வரப்ப இப்படி தான் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி தான் ஆரம்பீங்க. இதை விரிவு படுத்த வாய்ப்பு உள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி, நீட் தேர்வின் மறு வடிவம் தான் cute தேர்வு.. இந்த தேர்வை மாநில அரசு கல்லூரிகளில் கொண்டு வந்து விடுவார்கள் எனவே உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாகனியாகி விடும்..நீட் கியூட் அவுட் என குறிப்பிட்டார். இதனையடுத்து சட்டபேரவையில் பொது நுழைவுத்தேர்விற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.