அசைவ உணவு உண்டதற்காக தாக்குதலா? சீமான் கடும் கண்டனம்!!

Published : Apr 11, 2022, 03:08 PM IST
அசைவ உணவு உண்டதற்காக தாக்குதலா? சீமான் கடும் கண்டனம்!!

சுருக்கம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் நடத்தியதற்கு நாம்  தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் நடத்தியதற்கு நாம்  தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டு உள்ளது. அப்போது அங்கு சென்ற ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் ராம் நவமி பண்டிகையன்று அசைவ உணவு சாப்பிடுவீர்களா என்ற சத்தமிட்டு, அசைவ உணவு பரிமாறியவர்களையும், சாப்பிட்டவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. தகவலறிந்து பல்கலைக்கழகத்துக்கு விரைந்த போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி வரும் நிலையில், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலுக்கு ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியே முழு காரணம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஏபிவிபி அமைப்பினர் ரவுடிகளை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாகவும் மோதலை உண்டாக்கியதாகவும் மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் பல்கலைக்கழக ஊழியர்களையும் ஏபிவிபி அமைப்பினர் தாக்கியதாக தெரிவித்துள்ள மாணவர் சங்கத்தினர், இனி அசைவ உணவுகளை சமைக்கக் கூடாது என மிரட்டியதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் நடத்தியதற்கு நாம்  தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

உணவு எனும் தனிமனித உரிமையில் தலையிட்டு, அதற்காகத் தாக்குதல் தொடுத்திருக்கிற பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களைச் சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து, இடையூறு செய்வதும், அதனைக் காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச்செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறலாகும். பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்தியப்பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழானச் செயல்களாகும். ஆகவே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் தொடுத்திட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கல்லூரியின் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி