
தமிழகத்தில் தற்போது டெங்கு ஆட்சி தான் நடைபெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியது உண்மை என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு நோயால் பல பேர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக அரசே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் தற்போது டெங்கு அரசு நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பிக்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், இந்த ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டும், இறந்தும் போயியுள்ளனர் என்றும் இந்த அரசு டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியை தக்க வைப்பதிலேயே குறியாக இருப்பதால் மக்களை பற்றி கவலைப்படாமல் உள்ளனர் எனவும், அரசு சம்பந்தப்பட்ட எந்த துறையும் சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தகுந்த முடிவுகளை எடுத்து அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்குவதற்கான ஆள் இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது டெங்கு ஆட்சி தான் நடைபெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியது உண்மை என்றும் தெரிவித்தார்.
தற்போது வரை தமிழகத்தில் டெங்குவிற்கு 150பேர் பலியாகியுள்ளதாகவும், 25,000 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.