ஓட்டை பேருந்துக்கு ஓவர் டிக்கெட்டா? மக்கள் கொடுத்த தண்டனை!! கண்ணீர் விடாத குறையாக கதறும் அரசு

 
Published : Jan 26, 2018, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஓட்டை பேருந்துக்கு ஓவர் டிக்கெட்டா? மக்கள் கொடுத்த தண்டனை!! கண்ணீர் விடாத குறையாக கதறும் அரசு

சுருக்கம்

tamilnadu people denied to travel government bus

முறையான பராமரிப்பில்லாமல் பழையதாக இருக்கும் அரசு பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மக்களின் எண்ணம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் பேர் அரசு பேருந்தை புறக்கணித்து ரயில் மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதனால் அரசு எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் திகைத்து போயுள்ளனர்.

டீசல் விலை உயர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம், பராமரிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 50% முதல் 100% பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்த சுமையை மக்களின் தலைமீது ஏற்றியது அரசு.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு செவிசாய்க்கவில்லை.

அதனால், அரசுக்கு மக்கள் வேறு வழியில் பாடம் கற்பித்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 70% பேருந்துகள் பழையதாக உள்ளன. இதனால் கூடுதல் கட்டணம் கொடுத்து பழைய பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டு, ரயில்கள், தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் மக்கள் பயணம் செய்ய தொடங்கிவிட்டனர். எனவே அரசு பேருந்துகளின் சேவையில் உடனடியாக மாற்றம் செய்யாவிட்டால், அரசு போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு நிரந்தரமாகிவிடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கட்டண உயர்வுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்தனர். வசூல் தொகையும் ரூ.21 கோடி வரை கிடைத்தது. கட்டண உயர்வுக்கு பிறகு சுமார் ரூ.35 கோடி முதல் ரூ.38 கோடி வரையில் வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினசரி வசூல் ரூ.28 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. பயணிகளின் மொத்த எண்ணிக்கையும் ஒரு கோடியே 85 லட்சமாக குறைந்து விட்டது. சுமார் 25 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் ரயில் மற்றும் தனியார் ஆம்னி பேருந்து பயணத்துக்கு மாறியிருக்கலாம் 

கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும். எனினும் மக்கள் அரசு பேருந்துகளை புறக்கணித்துவிட்டு தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர். பராமரிப்பில்லாத பழைய பேருந்துகளை வைத்துக்கொண்டு அதிக கட்டணம் வசூலிப்பதே மக்கள் அரசு பேருந்துகளை புறக்கணித்ததற்குக் காரணம்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட முதல் நாளே கூடுதலாக 8 கோடி வருமானம் கிடைத்ததாக அரசு தெரிவித்தது. ஆனால் தற்போது சுமார் 25 லட்சம் பேர் அரசு போக்குவரத்தை புறக்கணித்துவிட்டனர். இதே நிலை நீடித்தால் அரசு போக்குவரத்து கழகம் மேலும் நஷ்டம் அடையுமே தவிர லாபம் ஈட்ட வழியில்லை. எனவே கள நிலையை புரிந்துகொண்டு அரசு செயல்பட வேண்டும் என்பது அரசியல் நோக்கர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!