
ரஜினிக்கு வழங்கப்பட்ட யோசனைகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் கட்சி தொடங்குவது குறித்து ரஜினி யோசித்து வருகிறார் என்றும் இப்போதைக்கு கட்சி தொடங்கமாட்டார் என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி டிடிவி தினகரன் சார்பில், மதுரையில் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இன்றைக்கு தமிழ்நாட்டில் நிர்வாக திறமையற்ற கூட்டம் ஆட்சி நடத்தி வருகிறது. இன்னும் எத்தனை நாள் இந்த ஆட்சி நடக்கும் என்று சொல்ல முடியாது என்றார். மக்களே வெகுண்டெழுந்து அவர்களை விரட்டும் அளவுக்கு விஷயங்கள் நடைபெற்று வருகிறது.
கழக பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் தினகரன் ஆகியோரது காலில் விழுந்து பதவி வாங்கியவர்கள் எல்லாம் இன்றைக்கு நம்மை துரோகி என்று கூறுகிறார்கள். இதற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள். தினகரன் ஆட்சி அமையப்போவது உறுதி என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.
எடப்பாடி அணிக்கு, மத்திய பாஜக அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும், தற்போது தமிழக அரசை பாஜக விமர்சிக்க தொடங்கி விட்டதாகவும் கூறினார்.
ரஜினி, கமல் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். ஆனால் வெற்றி பெறுவார்களா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்போது பேஷன் ஆகிவிட்டது என்றார்.
ரஜினிக்கு வழங்கப்பட்ட யோசனைகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் கட்சி தொடங்குவது குறித்து ரஜினி யோசித்து வருகிறார். அதனால் ரஜினி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.