புரட்சி தமிழர் பட்டம் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுக்கே சொந்தம். எடப்பாடி பட்டத்தை மாற்றாவிடில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என கொங்கு இளைஞர் பேரவை கட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைவர்களின் பட்டங்கள்
அதிமுகவில் நிறுவனர் எம்ஜிஆருக்கு புரட்சி தலைவர், அதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு புரட்சி தலைவி என்ற பட்டம் சூட்டப்பட்டது. இதனையடுத்து தற்போது அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் சூட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திரைப்படத்தில் நடிகர் சத்யராஜை எல்லாரும் புரட்சி தமிழர் என்று அழைத்து வந்த நிலையில், அந்த பட்டத்தை எடப்பாடி பழனிசாமி பறித்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த பட்டம் ஏற்கனவே கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடிக்கு புரட்சி தமிழர் பட்டமா.?
மதுரையில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எழுச்சிமாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிலையூர் ஆதினம் புரட்சி தமிழர் என பட்டம் சூட்டினார். அதற்கு தற்போது பல்வேறு சர்சைகள் ஏற்படுள்ள நிலையில், அந்த புரட்சி தமிழர் பட்டத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே கொங்கு இளைஞர் பேரவை மாநாட்டில் தனியரசுக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கொங்கு இளைஞர் பேரவையினர் கூறுகையில், ஒரு வருடமாக சுவர் விளம்பரம், போஸ்டர் , பிளக்ஸ்போர்டு உள்ளிட்ட பல்வேறு விளம்பர பலகைகளில் "புரட்சி தமிழர் தனியரசு" என விளம்பரம் செய்து வருகின்ற போது தனியரசு பயன்படுத்தி வருகின்ற புரட்சி தமிழர் பட்டத்தை எவ்வாறு அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு சூட்டலாம் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டப்படி நடவடிக்கை
இது தொடர்பாக மதுரை மாவட்ட கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், மேலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் நாகரீகம் கருதி உடனடியாக புரட்சி தமிழர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும். மீண்டும் அந்த பட்டத்தை அவர் பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் ஒரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், கோவை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக மதுரை மாவட்ட செயலாளர் அய்யூர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
இபிஎஸின் பொதுச்செயலாளர் பதவி தப்புமா? ஓபிஎஸ்-க்கு இடைக்கால நிவாரணம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு..!