
அப்போது பேசிய அண்ணாமலை, ‘இஸ்லாமியர்களின் கடமைகளில் முக்கியமாக கருதப்படும் ரமலான் நோன்பு தற்பொழுது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த புண்ணிய காலத்தில் உங்களுடன் கலந்து கொள்வதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். பாஜகவை பற்றி புரியாதவர்களும், தெரியாதவர்களும் அரசியல் காரணங்களுக்காக பாஜக மாநில தலைவரும், பாஜகவினரும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கருதுகிறார்கள்.
தமிழக பாஜகவில் சிறுபான்மையினர் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர்.இந்தியாவில் அவரவர் கடவுளை விட்டு கொடுப்பதில்லை. இதைத்தான் இந்தியா விரும்புகிறது. ஆனால், பாஜகவின் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் உள்ளனர். பாஜகவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தேசியத்தை பற்றியும் முழுமையாக தெரியும். இஸ்லாத்தை பற்றியும் முழுமையாக தெரியும். இந்த கட்சியில் இஸ்லாமியர்களுக்கும் பங்கு உண்டு என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
பாஜகவில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்கள் பாஜகவின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே துணையாக இருந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது சில அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்துகளையும், இஸ்லாமியர்களையும் எதிரும் புதிருமாக வைத்து கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்புக்காகவும், சுதந்திரத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உறுதி செய்து வருகிறார். இஸ்லாம் மதத்தில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார்கள்’ என்று கூறினார்.