திமுக எம்.பி.க்களால் தமிழக அமைதிக்கே பங்கம்... அண்ணாமலை அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டு..!

By Asianet TamilFirst Published Oct 10, 2021, 8:06 AM IST
Highlights

தமிழகத்தில் திமுக எம்.பி.க்களின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார்.
 

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியம், நேற்று முன் தினம் இரவு வள்ளியூரை அடுத்த காவல்கிணறு அருகே ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த பாஜக நிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரனை நேரடியாக சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி, அங்கிருந்த கேமராக்களையும் அடித்து நொறுக்கி, கேமராவையும் எடுத்து சென்று விட்டார். வெளியே சென்றால் உயிருக்கு ஆபத்து என்று கடையில் காத்திருந்து பின், மருத்துவமனைக்கு செல்ல பயந்து, பாஸ்கரன் தன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். மாவட்ட தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.


திமுக எம்.பி.க்களின் அராஜகம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. கடலுார் திமுக எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞானதிரவியம் ஒருவர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் தொடுத்துள்ளார். இவர் மீதும் கடுமையான வழக்குப்பதிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட எஸ்.பி.யை கேட்டுக் கொள்கிறேன். அரசியல் அதிகாரம் என்பது நிலையற்றது. பிரியாணி கடை முதல் டீக்கடை வரை, திமுகவின் அராஜகத்தை, ரவுடியிசத்தை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆளுங்கட்சியாக வந்த பின்பும் அதே பழக்கத்தை தொடர்கின்றனர். இப்போது திமுக எம்.பி.க்களே இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது, தமிழகத்தின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும் என்பது உறுதி. இதுபோன்ற நேரத்தில், அரசியல் பாரபட்சம் காட்டாமல், காவல் துறையினர் தன் கடமையைச் சரியாக செய்ய வேண்டும். ஞானதிரவியம் மீது சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

click me!