தேர்தல் கருத்துக்கணிப்பு: பஞ்சாப்பில் அடிச்சு தூக்கும் ஆம் ஆத்மி.. கோட்டை விடும் காங்.. படுபாதாளத்தில் பாஜக!

By Asianet TamilFirst Published Oct 10, 2021, 7:46 AM IST
Highlights

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனி பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
 

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் முதல்வராக இருந்த கேப்டன் அம்ரீந்தர் சிங் உட்கட்சி பிரச்னையால் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றார். இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பிரச்னையால், தேர்தலில் அதன் வெற்றியைப் பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் பேசிவந்தனர். தற்போது ஏபிபி - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பிலும் அது வெளிப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெறும் சட்டப்பேரவத் தேர்தலில்  அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில்  ஆம் ஆத்மி 49 - 55 தொகுதிகளில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.  காங்கிரஸ் 30 - 47 தொகுதிகள், அகாலி தளம் 17 - 25 தொகுதிகள், பாஜக 0 - 1 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
அதாவது, ஆம் ஆத்மி கட்சிக்கு 36 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு 32 சதவீத வாக்குகளும், ஷிரோமணி அகாலிதளம் கட்சிக்கு 22 சதவீத வாக்குகளும், பாஜக 4 சதவீத வாக்குகளும், மற்றவர்கள் 6 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ், அகாலிதளம் கூட்டணி மாறிமாறி ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில், தற்போது தனி பெரும் கட்சியாக ஆம் ஆத்மி மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டுகிறது.

click me!