தமிழகத்தில் கோயில்கள் திறப்பு விவகாரத்தில் பொய் சொல்வது யார்..? ஓயாத வார்த்தைப் போர்!

By Asianet TamilFirst Published Oct 9, 2021, 10:18 PM IST
Highlights

தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு மக்களிடம் பொய் பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
 

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவியதால் கடந்த மே, ஜூன் மாதங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஜூலைக்குப் பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில் தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தில் கோயில்கள் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், எல்லா நாட்களும் கோயில்களைத்  திறக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். கோயில்களைத் திறக்கக் கோரி கடந்த 7-ஆம் தேதி கோயில்கள் முன்பு தமிழக பாஜகவினர் போராட்டமும் நடத்தினர். 
இந்நிலையில் பாஜகவின் போராட்டம் பற்றி அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் வழிகாடுதல்படிதான் கோயில்கள் 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. எல்லா நாட்களும் திறக்க வேண்டுமென்றால், மத்திய அரசிடமிருந்து கடிதம் வாங்கி வாருங்கள்’ என்று அமைச்சர் சேகர்பாபு மிகக் காட்டமாக பாஜகவினரை விமர்சித்திருந்தார்.
அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து பற்றி சென்னையில் தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் எல்லா நாட்களிலும் கோயில்களை திறக்கும் விவகாரத்தில் அமைச்சர் சேகர் பாபு மக்களிடம் பொய் பேசி வருகிறார். கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் மிகத் தெளிவாக உள்ளன. ஆனால், அமைச்சர் சேகர் பாபு மக்களிடம் பொய் பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ளார்" என அண்ணாமலை விமர்சனம் செய்தார். கோயில்கள் திறப்பு விவகாரத்தில் பாஜக தலைவர்கள் அண்ணாமலை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் திமுக அரசையும் அமைச்சர் சேகர்பாபுவையும் விமர்சித்து வருகிறார்கள். தொடர்ந்து இந்த விவகாரத்தில் பாஜக - திமுக இடையே வார்த்தைப் போர் முற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!