கொலை வழக்கில் சிக்கிய கடலூர் திமுக எம்.பி.. பதவியை ராஜினாமா செய்வாரா..? வளைய வரும் தகவல்கள்.!

By Asianet TamilFirst Published Oct 9, 2021, 9:04 PM IST
Highlights

கடலூரில் முந்திரி கம்பெனியில் ஊழிவர் அடித்து, விஷம் கொடுத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் திமுக எம்பி ரமேஷை போலீஸார் தொடர்ந்து தேடி வரும் நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பத்தில் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமாக முந்திரி கம்பெனி உள்ளது. அங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜன் என்பவர் அடிக்கடி முந்திரியை திருடியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கோவிந்தராஜ் தாக்கப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கோவிந்தராஜனின் குடும்பத்தினருக்கு கடந்த செப்டம்பர் 19 அன்று முந்திரி கம்பெனியில் இருந்து தகவல் வந்துள்ளது. ஆனால், தனது தந்தை தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று அடித்துக்கொல்லப்பட்டதாக கோவிந்தராஜனின் மகன் போலீஸில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கோவிந்தராஜ் தாக்கப்பட்டபோது நேரில் பார்த்த ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், கோவிந்தராஜ் முந்திரி திருடியது தெரிய வந்ததால் அக்கம்பெனியின் உரிமையாளரும் திமுக எம்.பியுமான ரமேஷ், அங்கு பணி புரியும் சிலருடன் சேர்ந்து கடுமையாகத் தாக்கியது தெரிய வந்தது. அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றபோது, உடலில் காயங்கள் இருந்ததால் கோவிந்தராஜனை கைது செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.
அதே வேளையில் அவரை மருத்துவமனையில் சேர்க்கவும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், கோவிந்தராஜனை மீண்டும் முந்திரி கம்பெனிக்கே அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு விஷம் கொடுத்து பிறகு மருத்துவமனையில் சேர்த்ததும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கோவிந்தராஜன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தபோது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர். மேலும், திமுக எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை, கூட்டுசதி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், திமுக எம்.பி. ரமேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விவகாரம் திமுகவுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் என்பதால், ரமேஷ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

click me!