
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 8ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டசபை கூட வேண்டும். கடைசியாக கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஜூலைவரை சட்டசபை நடந்தது. அப்போது, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இந்நிலையில், வரும் ஜனவரி 8ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என சட்டசபை செயலர் பூபதி அறிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநரின் உரை இருக்கும். அதன்பிறகு ஆளுநரின் உரை மீதான விவாதம், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படும். சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு முடிவுசெய்யும்.
ஓகி புயல் பாதிப்பு, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா, மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புள்ளது.
அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டு ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன் முதல்முறையாக தமிழக சட்டசபைக்குள் நுழைகிறார். அரசுக்கு எதிரான திமுகவின் குரலோடு சேர்த்து தினகரனின் குரலும் ஒலிக்க வாய்ப்பிருக்கிறது. இதை ஆட்சியாளர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள், திமுகவையும் தினகரனையும் சமாளிக்க என்ன மாதிரியான வியூகங்கள் வைத்துள்ளனர் என்பதையும் சட்டசபையில் ஆட்சியாளர்களின் செயல்பாட்டில்தான் பார்க்க வேண்டும்.