
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 8 ஆம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. இதனை தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி இன்று அறிவித்தார். 2018 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் உரையுடன் சட்டப்பேரவை துவங்குகிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த ஜூன் மாதம் 14 ஆம தேதி தொடங்கி ஜூலை 19 ஆம தேதி வரை நடந்தது. அதன் பின், பேரவைக் கூட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடித்து வைத்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார். இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்து; திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
அது மட்டுமல்லாது ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் நாளை பதவியேற்க உள்ளார். தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், தினகரன் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்ய உள்ளார். இந்த நிலையில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முக்கித்துவம் பெறுவதாக அமைகிறது.