
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
கொரோனா 2வது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி, மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.
அப்படி இருந்த போதிலும் கொரோனா தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியுள்ளது. நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை கைமீறிச் சென்றுவிட்டதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சுகாதாரத் துறைச் செயலாளர், இதர துறைகளின் செயலாளர்கள், மருத்துவ நிபுணர் குழுவினர் பங்கேற்றுள்ளனர். இதில், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கவும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.