'ஏப்.23 வரை இப்படித்தான்’...தீயாய் பரவும் கொரோனா தொற்று... திடீரென உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 16, 2021, 1:07 PM IST
Highlights

அவசர வழக்குகள், முக்கிய முறையீடுகளை தவிர்த்து, மற்ற வழக்குகள் அனைத்தும் வரும் 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாகவே விசாரிக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ​கடந்த 24 மணிநேரத்தில் 7,987 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 95,387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. நேற்று மட்டும் 4,176 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,91,839 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,999 ஆக அதிகரித்துள்ளது. 

​தீயாய் பரவும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வீடு வீடாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு விரைவாக பணியாற்றி வருகிறது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றமும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி அவசர வழக்குகள், முக்கிய முறையீடுகளை தவிர்த்து, மற்ற வழக்குகள் அனைத்தும் வரும் 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாகவே விசாரிக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும்,  இதே நடவடிக்கையே உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் அறையும் நாளை முதல் மூடப்படும் என்றும்,  பார் கவுன்சிலில் உள்ள அனைத்து நூலகங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!