
வாட் வரியை தமிழக அரசு குறைக்கவில்லை
பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், பொதுமக்களின் சுமையை குறைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை சுட்டிக்காட்டினார். இதேபோன்று மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரிகளை குறைத்ததாக கூறினார். ஆனால் மத்திய அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் வரியை குறைக்கவில்லையெனெ்றும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசால் மக்கள் பாதிப்பு
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சட்டசபையில் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சியில் அமைகிறதோ அப்போதெல்லாம் பெட்ரோல் டீசல் போன்ற விலைகளை குறைத்தது தான் கடந்த கால வரலாறு என கூறினார். மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்ற 7 வருடத்தில் பெட்ரோல் டீசல் வருவாய் சுமார் 300 மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் அது குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டார். ஏழு வருடங்களில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரிகளை மூன்று மடங்கிற்கும் மேல் உயர்த்தி 200 சதவீதம் வருவாய் மத்திய அரசுக்கு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார். டீசலை பொருத்தவரை மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயானது தற்போது 10 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இந்த வருவாய் 7 மடங்கு அதிகம் எனவும், இத்தகைய பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் மட்டுமே பாதிக்கப் படுகிறார்கள் என தெரிவித்தார்.
பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைத்துள்ளது
மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரிகளை பல மடங்கு விலையை உயர்த்தி விட்டு தற்போது தமிழக அரசின் குறைக்கவில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைப்பதற்கு முன்னதாகவே தமிழகத்தில் டீசல் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் சென்றால் தமிழகத்திற்கு அதிலிருந்து 35 பைசா தான் தற்போது கிடைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இதே கடந்த காலங்களில் ஒரு ரூபாய் மத்திய அரசுக்கு சென்றால் தமிழகத்திற்கு 60 பைசா வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழக சொந்த நிதியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார். மத்திய அரசு டீசல் விலை பல மடங்கு உயர்த்திய நிலையில், மாநிலங்களுக்கு பகிராமல் இருப்பது எந்தவகையில் நியாயம், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு முறையற்றது என தெரிவித்தார்.