விவசாயிகளின் மனதை குளிரவைத்த அமைச்சரின் அறிவிப்பு! நெல் விற்பதில் சிரமமிருந்தால் இந்த நம்பரை தொடர்புகொள்ளவும்

By karthikeyan VFirst Published Apr 12, 2020, 4:36 PM IST
Highlights

விவசாயிகள் விளைய வைத்துள்ள நெல் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்துகொள்ளும் என அமைச்சர் காமராஜ்  தெரிவித்துள்ளார்.
 

கொரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. வருவாயை இழந்து விளிம்புநிலை மக்கள் தவிக்கின்றனர்.

ஊரடங்கால் விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு. அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை. அதேபோல விளையவைத்த உணவுப்பொருட்களை பாதுகாக்க முடியாமல் தவித்துவருகின்றனர்.

விவசாயிகளின் நலன் காக்க அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விளையவைத்துள்ள விவசாயிகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள 111 குளிர்சாதன அரசு கிடங்குகளில், ஏப்ரல் 30 வரை எந்தவித கட்டணமுமின்றி காய்கறிகள், பழங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என முதல்வர் பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, விவசாயிகள் விளைபொருட்களை, இடைத்தரகர்களை அனுமதிக்காமல் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இப்படியிருக்கையில், நெல்லையில் 2500 அரிசி மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின. இதுமாதிரியான சம்பவங்கள் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், நெல் மூட்டைகள் அனைத்தையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ”நெல்லை விற்க முடியவில்லை என்றோ அல்லது மழை பெய்கிறது என்றோ விவசாயிகள் யாரும் பயப்பட தேவையில்லை. நெல் மூட்டைகள் அனைத்தையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளும். 

விவசாயிகள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் மையங்களுக்கு சென்று டோக்கன் வாங்கிக்கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில், நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச்சென்று விற்றுவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அனைத்து நெல் மூட்டைகளும் வாங்கிக்கொள்ளப்படும். இதில் ஏதாவது சிரமம் இருந்தால் 044 - 26426773 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

click me!