இந்த நேரத்திலும் மாநில உரிமைகளை பறிப்பதா..? கொந்தளித்த வைகோ..!

By Manikandan S R SFirst Published Apr 12, 2020, 2:45 PM IST
Highlights

கொரோனா பரவலைத் தடுக்கத் தேவையான பாதுகாப்புச் சாதனங்கள், முகக் கவசங்கள், கை உறைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசுதான் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் என்று எதேச்சாதிகாரமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்

கொரோனா மருத்துவ உபகரணங்கள் கொள்முதலை மத்திய அரசே செய்து மாநில அரசாங்களுக்கு வழங்கும் என மத்திய அரசு தெரிவித்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், அனைத்து மாநிலங்களும் மிகக் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய கூடாது என்று மத்திய பாஜக அரசு தடை விதித்திருப்பது கண்டனத்துக்கு உரியது.

அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரங்கள் பட்டியலில், பொது சுகாதாரம் மக்கள் நல்வாழ்வு என்பவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. கொரோனா தொற்று நோய் பாதிப்புகள் போன்ற சில அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும்போது மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுப்பட்டியலில் அதிகாரம் 29 இல் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் மாநில அரசுகள் தான் மக்களிடையே நேரடியாக இறங்கி பணியாற்றும் கடமையையும் பொறுப்பையும் பெற்றிருக்கின்றன.

கொரோனா பரவலைத் தடுக்கத் தேவையான பாதுகாப்புச் சாதனங்கள், முகக் கவசங்கள், கை உறைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசுதான் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் என்று எதேச்சாதிகாரமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்”. இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

click me!