வயநாட்டில் ராகுல்... தமிழகத்தில் சிக்கலா..? அதெற்கெல்லாம் சான்ஸே இல்லை: சிபிஎம் அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Apr 3, 2019, 10:22 AM IST
Highlights

இடதுசாரிகளை எதிர்த்து வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதால், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியைப் பாதிக்குமா என்பது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்ததிலிருந்தே பாஜக அவரை கிண்டல் செய்துவருகிறது. இடதுசாரி தலைவர்களும் ராகுல் கேரளாவில் போட்டியிடுவதை விமர்சனம் செய்துவருகின்றனர். ராகுலை எப்படியும் தோற்கடிப்போம் என்றும் சூளுரைத்துவருகிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. கேரளாவில் காங்கிரஸை எதிர்த்து கொந்தளிக்கும் இடதுசாரிகள், தமிழகத்தில் ஒரே கூட்டணியில் இருப்பதை பல அரசியல் கட்சிகளும் கிண்டல் செய்துவருகின்றன. சமூக ஊடங்களிலும் மீம்ஸ்கள் போட்டு இடதுசாரிகளை கிண்டலடித்துவருகிறார்கள்.

 
இந்நிலையில் வயநாட்டில் இடதுசாரிகளை எதிர்த்து ராகுல் போட்டியிடுவது குறித்தும்; இதனால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.  “தற்போது பாஜக ஆட்சியை வீழ்த்துவதுதான் இந்தியா முழுவதும் உள்ள எல்லா கட்சிகளின் நோக்கம். காங்கிரஸ் கட்சியின்  நோக்கமும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். கேரளாவில் பாஜக என்ற கட்சியே கிடையாது. அங்கே போட்டியே காங்கிரஸுக்கும்  கம்யூனிஸ்ட்டுகளுக்கும்தான். நிலைமை இப்படி இருக்கும்போது அங்கே ராகுல் போட்டியிடுவது பாஜக மீதான எதிர்ப்பை முனை மழுங்கச் செய்துவிடும். அதன் காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பை பதிவுசெய்தது.

இதை பெரிய சர்ச்சையாக்கி தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியைப் பாதிக்கும் என்று சிலர் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் நிச்சயம் ஈடேறாது. தமிழகத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், தொழில் நடத்துபவர்கள் என அனைத்து தரப்பினருமே மத்திய, மாநில அரசுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அரசுகளுக்கு எதிரான கோபம் பரவலாக இருப்பதைப் பிரச்சாரப் பயணத்தின்போது உணர முடிகிறது. அது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

click me!