பொல்லாத ஆட்சி அதுக்கு பொள்ளாச்சியே சாட்சி... எடப்பாடியை கிழித்து தொங்கவிட்ட மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Apr 3, 2019, 10:13 AM IST
Highlights

முந்தைய கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளுக்கு நிகரான சாதனைகளை தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக நிகழ்த்திக் காட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முந்தைய கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளுக்கு நிகரான சாதனைகளை தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக நிகழ்த்திக் காட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கு திரண்டுள்ள மக்களை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என தோன்றுகிறது.  

இதை பார்க்கும்போது இத்தேர்தலில், தமிழகம்-புதுவையில் 40க்கு 40 வெற்றியை பெறப்போகிறோம் என்பது தெளிவாக தெரிகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க, இங்கு திரண்டுள்ளீர்கள். இது, தேர்தல் பிரசார பொதுக்கூட்டமா? அல்லது மாநில மாநாடா? என சந்தேகம் எழும் அளவுக்கு இங்கு குவிந்துள்ளீர்கள். இது, வெற்றிவிழா மாநாடு என கருதும் அளவுக்கு கூட்டம் குவிந்துள்ளது. ‘நம் கையில் மாநில ஆட்சி, நம் கை காட்டுவதே மத்திய ஆட்சி’’ என்ற முழக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்கிறோம். 

மேலும் மத்தியில் மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் எடப்பாடி தலைமையில் எடுபிடி ஆட்சி நடக்கிறது. மோடி, ஒரு சர்வாதிகாரி. எடப்பாடி ஒரு உதவாக்கரை. ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி. மோடிக்கேற்ற எடப்பாடி. எடப்பாடிக்கு ஏற்ற மோடி. இதுதான் இன்றை நாட்டின் நிலைமை என கடுமையாக சாடினார். ஆ.ராசா மீது மிகப்பெரிய வீண் பழியை போட்டார்கள். சதி செய்து, வழக்கில் சிக்கவைத்தார்கள். எந்த குற்றமும் இல்லை என நிரூபித்து, குற்றமற்றவராக வெளியே வந்தார். அவரை மீண்டும் உங்களிடத்தில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.

இக்கூட்டத்தில் பங்கேற்க, நான் எனது ஓட்டலில் இருந்து வெளியே வந்தேன். அங்கு, 2 பெண் காவலர்கள் இருந்தனர். ஒரு செல்பி எடுக்க வேண்டும் என கேட்டனர். நான், அவர்களிடம், உங்களுக்கு எந்த ஊர்? என கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல், ரொம்ப வெட்கப்பட்டனர். ஏன் என திருப்பி கேட்டேன். உடனே, பொள்ளாச்சி... என்றனர். பொள்ளாச்சி என பெயர் சொல்வதற்கே வெட்கமாக உள்ளது என்பதை வெளிக்காட்டினார்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சி பொல்லாத ஆட்சியாக உள்ளது. கடந்த 7 ஆண்டாக, 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் நமக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் ஒன்றும் இல்லை. வெறும் 1.1 சதவீதம் மட்டும்தான். ஜெயலலிதா முதல்வராக அமர்ந்தார். அவரால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியில் இன்று கொலையாளிகள் அமர்ந்துள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

click me!