அசிங்கப்படுத்திய துரைமுருகன் அசிங்கப்பட்டு கிடக்கிறார்... பூரிப்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா..!

By Asianet Tamil  |  First Published Apr 3, 2019, 9:48 AM IST

தேமுதிகவை அசிங்கப்படுத்த வேண்டும் என்று துரைமுருகன்  நடத்திய நாடகம் இன்று அவருக்கே திரும்பி வினையாக முடிந்துள்ளது என்று தேமுதிக பொருளார் பிரேமலதா தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தேமுதிக பொருளாளர் திருவண்ணாமலை வந்தார். ஆனால், 10 மணியைத் தாண்டியிருந்ததால், சைகையில் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 
 “வேலூரில் நடைபெற்ற சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று துரைமுருகன் சொல்கிறார்.  எங்களை வெற்றி பெற செய்யவிடாமல் தடுக்கும் சூழ்ச்சி என்கிறார். இது மிகப் பெரிய பொய். அது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாதாள அறைகளிலும் சிமெண்ட் குடோன்களிலும் கல்லூரிகளிலும் தோண்டத் தோண்ட குவியல்கள் மாதிரி பணம் வந்துகொண்டே இருக்கிறது. 
தேமுதிகவை அசிங்கப்படுத்த வேண்டும் என்று துரைமுருகன்  நடத்திய நாடகம் இன்று அவருக்கே திரும்பி வினையாக முடிந்துள்ளது.வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை உருவாக்கியதே திமுக தான். திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா ஒரு புற்றுநோய் போல தமிழகம் முழுவதும் இன்று பரவிவிட்டது.
கிடைக்கும் தகவலை வைத்துதான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். இதை ஆளும் கட்சியின் சதி, மத்திய அரசின் சதி என்றெல்லாம் கூற முடியாது. சோதனை செய்வது பெரிய விஷயம் அல்ல. சம்பந்தபட்டவர்களுக்கு அதற்குரிய தண்டனையைப் பெற்று தர வேண்டும். இந்த வருமான வரிசோதனை திமுகவுக்கு ஓர் இழுக்கு. தமிழகத்தில் திமுக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் சோதனை நடத்த வேண்டும். யார் தவறு செய்தார்களோ அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.” என்று பிரேமலதா பேசினார்.

click me!