TN Local Body Election:ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது..I am watching.! முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

Published : Feb 23, 2022, 08:24 PM ISTUpdated : Feb 23, 2022, 08:30 PM IST
TN Local Body Election:ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது..I am watching.! முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சுருக்கம்

உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் எந்தவித புகாரும் இன்றி பணியாற்றி உள்ளீர்களா என்பதை நானே நேரடியாக கண்காணிப்பேன் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.  

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: "
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாகும். எங்களை நம்பி மக்கள் ஆட்சியைக் கொடுத்தார்கள், அத்தகைய மக்களின் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அதனை மக்களும் உணர்ந்து அங்கீகாரம் தந்துவிட்டார்கள் என்பதன் அடையாளம்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாகும்.

21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகள் எனக் கைப்பற்றியதன் மூலமாக தமிழகத்தையே முழுமையாக வென்றுள்ளது திமுக கூட்டணி. எதிர்க்கட்சிகளை முழுமையாக மக்கள் நிராகரித்துள்ளார்கள்; அவர்களது வாதங்களையும் நிராகரித்துள்ளார்கள். கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றும், கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நாங்கள் நிறைவேற்றவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பரப்புரை செய்யப்பட்டது.

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 70 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்பதைப் பட்டியல் போட்டு நான் விளக்கம் அளித்தேன். மற்ற வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதி அளித்தேன். தேர்தல் அறிக்கை என்பது ஐந்து ஆண்டுத் திட்டமாகும். அது எதையும் புரிந்துகொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.

வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவாக நிறைவேற்றி வருவதன் மூலமாக மக்களிடையே திமுகவுக்கும், திமுக அரசுக்கும் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள் அவதூறுகள் மூலமாகவும், பழிகளின் மூலமாகவும் மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள். ஆனால் மக்கள் எந்நாளும் உதயசூரியனைத் தவிர வேறு பக்கம் திரும்ப மாட்டோம் என்பதைக் காட்டி விட்டார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர், இந்த ஒன்பது மாத காலத்தில் திமுகவின் செல்வாக்கு மக்களிடையே மிக அதிகளவில் பெருகிவிட்டதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகமாக அதிகமாக எங்களுக்கான பொறுப்பும் கடமையும் அதிகமாகிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை மக்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்க்கும் கடமை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு. வெற்றி பெற்றவர்கள் அதனைச் சிறப்பாகச் செய்வார்கள். அதனை நானே நேரடியாகக் கண்காணிப்பேன். எந்தவிதப் புகாரும் வராத வகையில் அவர்கள் அனைவரும் பணியாற்றுவார்கள். அதனையும் நான் கண்காணிப்பேன். நாங்கள் நிறைவேற்றும் திட்டங்கள் முழுமையாக மக்களை வந்தடைகிறதா என்பதையும் நேரடியாக வந்து நான் பார்வையிடுவேன். உத்தரவு போடுபவனாக மட்டுமல்ல, கண்காணித்துக் கவனிப்பவனாகவும் நான் இருப்பேன்.

கரோனா கட்டுப்பாடு காரணமாக நேரடியாக வந்து தேர்தல் பரப்புரை செய்ய இயலவில்லை. காணொலி மூலமாகப் பெரும்பான்மை மாவட்டத்து மக்களை நான் சந்தித்தேன். வெற்றியை வழங்கிய மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க நிச்சயம் வருவேன்.

திமுகவின் 'திராவிட மாடல்' ஆட்சியை முன்னிலும் திறம்படக் கொண்டு செலுத்த ஊக்கமளித்து வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்" என்று அவர் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!