
தமிழ்நாடு முழுக்க சும்மா சுனாமி அடித்தது போல் வெற்றியை வளைத்துப் போட்டு அள்ளியிருக்கிறது ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம். கை நிறைய மேயர்கள், பை நிறைய சேர்மன்கள் என்று இமாலய வெற்றியின் குதூகலிப்பில் இருக்கிறார்கள்.
அதேவேளையில், எதிரணியான அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த தரப்பும் ஓ ஓ ஓவென அழுது கண்ணீர் வடித்து கரைபுரண்டு அழுமே! என்று எதிர்பார்த்தால், மேற்கு தமிழக அ.தி.மு.க.தான் அழுது கொண்டிருக்கிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கண்ட்ரோலில் இருக்கும் தெற்கு தமிழத்தின் அ.தி.மு.க.வோ கமுக்கமான ஒரு சந்தோஷத்தில் இருக்கிறது! என்கிறார்கள். ஏன்? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல் இதோ….
“ஜெயலலிதா இறந்த பின் கட்சியை கைப்பற்றிய சசிகலாவின் ஆணைகளுக்கெல்லாம் பன்னீர் தலை ஆட்டவில்லை. அதனால் அவரை முதல்வர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமியை அதில் அமரவைத்தார் சசி. ஆனால் எடப்பாடியாரும், பன்னீரும் கைகோர்த்து சசிகலாவை அ.தி.மு.க.விலிருந்து வெளியேற்றினர். இன்று வரை சசிகலாவால் அ.தி.மு.க. தலைமை அலுவலக சாலையில் கூட போக முடியவில்லை.
இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தாலும் கூட, எடப்பாடியாரின் சேலம் அடங்கிய மேற்கு தமிழக மாவட்டங்களில் அக்கட்சி வெற்றியை அள்ளியது. இதன் மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் எடப்பாடியார். என்னதான் பன்னீர்செல்வம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தாலுமே கூட இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியாரின் கைதான் ஓங்கியிருக்கிறது, அவர் கொடிதான் கட்சியில் உச்சத்தில் பறக்கிறது.
இந்நிலையில், நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் எடப்பாடியார் டீம் கெத்தாகதான் அணுகியது. ‘சட்டமன்றம் போல் இதிலும் நிச்சயம் வெல்வோம்’ என்று ஓப்பனாக பேசியே கட்சியில் ஆளுமையை செலுத்தினார் எடப்பாடியார். ஆனால், அவரது கனவு பகற்கனவாகிவிட்டது. தமிழகமெங்கும் வெற்றியை அள்ளிச் சுருட்டி விட்டது தி.மு.க. எடப்பாடியார் தலைமையிலான கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. மாஸ் மரண அடியை சந்தித்துள்ளது.
இந்த தோல்வியால் கடும் மன உளைச்சலில் அ.தி.மு.க. இருக்கும்! என நினைத்தால், தெற்கு மண்டல அ.தி.மு.க.வோ ரகசியமாக செம்ம குஷியாக இருக்கிறது! என்கிறார்கள். காரணம், எடப்பாடியாரின் கொங்கு கோட்டையும் தரைமட்டமாகிவிட்டதால் இனி கட்சியில் அவர் கோலோச்சவோ, கொடி நாட்டவோ, குரலை உயர்த்தவோ முடியாது. உயர்த்தினால் தெற்கு மற்றும் மற்ற மண்டல அ.தி.மு.க. நிர்வாகிகள் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்து பாய்வார்கள்!
நானே அ.தி.மு.க. என்று இறுமாப்பு காட்டி வந்தவரின் கனவு தகர்ந்தது!” என்கிறார்கள்.
இதே கருத்தை சோஷியல் மீடியாவில் பரப்பும் தி.மு.க.வின் இணையதள டீமோ “இ.பி.எஸ்.ஸின் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருந்த ஓ.பி.எஸ். அணிக்கு இது மிகப்பெரிய வெற்றிதான். அதனால்தான் வடிவேலு ஸ்டைலில் காசியப்பன் பாத்திரக்கடையில் ஒரு வெற்றிக்கோப்பையை காசு கொடுத்து வாங்கி, கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எடப்பாடி டீம் ரொம்பவே அவமானப்படுக் கிடக்குது பாவ்வ்வ்வம்!” என்று போட்டு தாக்குகின்றனர்.