ADMK Vs DMK : ஜெயலலிதா பிறந்தநாளன்று அதிமுக எடுக்கும் சபதம்..! தொண்டர்கள் உற்சாகம்

Published : Feb 23, 2022, 06:08 PM ISTUpdated : Feb 23, 2022, 06:45 PM IST
ADMK Vs DMK : ஜெயலலிதா பிறந்தநாளன்று அதிமுக எடுக்கும் சபதம்..! தொண்டர்கள் உற்சாகம்

சுருக்கம்

தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவைதான் என்றும் துவண்டுவிடாத நெஞ்சுறத்தோடு அதிமுகவை காப்பாற்றவும், தமிழக மக்களுக்கு தொண்டாற்றவும் அனைவரும் சபதம் ஏற்போம் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் கூறியுள்ளனர்.  

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்"தமிழக மக்களுக்கு, தான் ஆற்ற வேண்டிய மாபெரும் நன்றிக் கடனாக, அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர், தனக்குப் பின்னால் இந்த இயக்கத்தை வழிநடத்த அறிவும், ஆற்றலும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட ஒருவர் வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்துத் தந்த நல்முத்து அல்லவா மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

அரசியல் உலகிற்குள் புகுந்தவுடன் ஜெயலலிதா கண்ட சூழ்ச்சிகளும், சதிச் செயல்களும், வேதனை தரும் வார்த்தை அம்புகளும், நம்பிக்கை துரோகங்களும் கொஞ்சமா? ஆனால், கர்மயோகியான ஜெயலலிதா, கடமையில் தவறாத, துறவிகளுக்கே உரிய நெஞ்சுறத்தோடு ஒரு துறவியின் மனநிலையோடு எதிர்ப்புகளை முறியடித்தார்.இமாலய சாதனைகள் பல படைத்தார்.

பகைவர்களை மன்னித்தார். பழிச் சொல் கூறியவர்களையும், பாசத்துடன் ஏற்றுக்கொண்டார். உடன் இருந்தே குழி பறித்தோரையும், கொடுஞ்செயல் செய்தோரையும் கூட, குணம் என்னும் குன்றேறி நின்று ஏற்றுக்கொண்டார்கள். ஆட்சிப் பொறுப்பில், முதல்வராக மட்டும் அல்ல, எதிர்க்கட்சித் தலைவராகவும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் போன நிலை வந்த போதும், தன் வாழ்வின் இறுதி நேரத்திலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பிற்கு எந்தெந்த வகைகளில் உழைக்க முடியமோ அவை அத்தனையும் முழு மனதோடும், முழு ஆற்றலோடும் செய்து முடித்தார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

ஏழை, எளிய மக்கள், அதிகாரத்தின் ஒரு துளியையேனும் அனுபவித்திராத மக்கள், ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே பலம் பெற்று குரல் எழுப்பும் வாய்ப்பு பெற்ற மக்கள், பிறப்பாலும், வாழ்க்கையின் சூழல்களாலும் எப்பொழுதும் சூறாவளியில் சிக்கிய சருகுபோல் அல்லல்படும் பல கோடி மக்கள், இவர்கள் எல்லாம் ஏற்றம் பெற வேண்டும். மக்களாட்சியின் மகத்தான சாதனைகளில் இவர்கள் பங்குபெற வேண்டும் என்பதற்காகத் தான் "என்னுடைய காலத்திற்குப் பிறகும் அதிமுக ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். மக்கள் பணியாற்று" என்று சட்டமன்றத்தில், வேறு எந்த கட்சியின் தலைவரும், முதல்வரும் சொல்லாத மன உறுதியோடு சபதமேற்று சூளுரைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவைதான். ஆனால், துவண்டுவிடாத நெஞ்சுறத்தோடு அதிமுகவை காப்பாற்றவும், தமிழக மக்களுக்கு தொண்டாற்றவும், நம்மை நம்பி ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிக்கவும், ஜெயலலிதாவின் சபதத்தை நாமும் ஏற்போம். அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம். "நீடு துயில் கொள்ளும் எங்கள் அம்மாவே உங்கள் பிள்ளைகள், உங்கள் நம்பிக்கையை வீண்போகச் செய்யமாட்டோம். கட்சிக்கு வெற்றியை ஈட்டி உங்கள் ஆன்மாவை மகிழ்விப்போம்" என்பது அவரது பிறந்தநாளில் நமது சூளுரையாக அமையட்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!