"தூக்குல போடுங்க சார் இவங்கள"... கடுப்பான பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன்…

By Raghupati RFirst Published Jan 21, 2022, 7:49 AM IST
Highlights

பெண்களை தரக்குறைவாக சித்தரிப்பவர்களை ஜெயிலில் போட்டு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் உரையாடிக்கொள்வதற்கான வசதியை அளிக்கும் சமூக வலைத்தளச் செயலிதான் ‘கிளப் ஹவுஸ்’. தற்போது இந்தியா உள்படப் பல நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை இந்தச் செயலி பெற்றுவருகிறது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அரட்டை அறை நீடிக்கலாம். ஆனால், அரட்டை முடிந்த பிறகு அதில் பேசப்பட்ட எதையும் நெறியாளரோ பங்கேற்பாளர்களோ மீண்டும் கேட்க முடியாது. 

அதாவது, நிகழ் நேரத்தில் மட்டுமே இந்த உரையாடலைக் கேட்க முடியும். அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை தேவைப்பட்டால் மட்டுமே ‘கிளப் ஹவுஸ்’ நிறுவனம், குரல் பதிவுகளை விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளும். இந்தச் செயலியால் ஆபத்துகளும் அதிகம் என்கிற தகவல்களும் மற்றொரு பக்கம் வரத் தொடங்கியுள்ளன. மிக வேகமாக உடனுக்குடன் நடைபெறும் குரல்வழி உரையாடல்களை நாகரிக வரையறைகளை மீறாமல் கட்டுப்படுத்துவது பெரிதும் கடினம். இதனால், ‘கிளப் ஹவுஸ்’ பயனர்கள் அச்சுறுத்தப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் எளிதாகவும் விரைவாகவும் நடைபெறலாம். 

உரையாடல்களைப் பதிவுசெய்வதற்கான வசதி ‘கிளப் ஹவுஸ்’ செயலியில் இல்லை என்றாலும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் இருக்கும் ஸ்க்ரீன் ரெக்கார்டர் மூலம் எந்த ஒரு உரையாடலையும் பதிவு செய்ய முடியும். இதனால் தாம் பேசுவது பதிவுசெய்யப்படுகிறது என்பது தெரியாமல் பேசும் ஒவ்வொருவருக்கும் எதிர்பாராத ஆபத்துகள் விளையக்கூடும். அதேவேளையில் எந்தக் குரல் பதிவுகளும் கிடைக்கப்பெறாத பயனர்கள், தம் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல்ரீதியான கேலிகள், வசைவுகள் மீது புகாரளிப்பது கடினம். 

அதேபோல் ‘கிளப் ஹவுஸி’ன் அமைப்பிலும் பல பிரச்சினைகள் உள்ளன. ஒருவர் எந்தெந்த உரையாடலில் பங்கேற்கிறார் என்பதை அவருடைய நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் பார்க்க முடியும். பயனரின் அந்தரங்கம் இதனால் பாதிக்கப்படலாம்.தற்போது சுல்லி டீல், புல்லி பாய் செயலிகள் வாயிலாக முஸ்லிம் பெண்கள் இழிவு படுத்தப்பட்ட நிலையில், 'கிளப் ஹவுஸ்' செயலியில் முஸ்லிம் பெண்கள் குறித்து பேசப்பட்ட தரக்குறைவான உரையாடல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கிளப் ஹவுஸ் என்ற இந்த அரட்டை செயலியில் ஒரு குழுவினர் முஸ்லிம் பெண்கள் குறித்து தரக்குறைவான கருத்துக்களை சமீபத்தில் பேசினர். 

இந்த உரையாடல்களின் முழு பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தை டில்லி பெண்கள் கமிஷன் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘கிளப் ஹவுஸ்' என்ற 'மொபைல் ஆப்' செயலியில் நடந்த உரையாடலில், முஸ்லிம் பெண்கள் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை, சிலர் செய்துள்ளனர். 

இதை யார் செய்திருந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த மாதம், 'சல்லி வீல்ஸ், புல்லிபாய்' மொபைல் ஆப்களில், முஸ்லிம் பெண்களின் புகை படங்களைப் பதிவிட்டு, அவர்கள் விற்பனைக்கு என்று ஏலம் நடத்தி, அவதுாறு செய்திருப்பது அநாகரிக செயல்.காவல் துறை இந்த குற்ற செயலில் ஈடுபட்டோரை கைது செய்திருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தை வைத்து, இந்த குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த ஒரே வழி, சட்டங்களை கடுமையாக்க வேண்டும். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!