அண்ணாமலை வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்காமல் உண்மைநிலையை எடுத்து சொல்லுங்க.. பொங்கும் கொங்கு ஈஸ்வரன்.!

By vinoth kumarFirst Published May 18, 2022, 10:39 AM IST
Highlights

தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மைநிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்லவேண்டும். இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. 

நூல் விலை உயர்வால் தமிழக ஜவுளி தொழில் நொடிந்து வருவதை ஒன்றிய அரசின் கவனத்திற்கு அண்ணாமலை எடுத்துச் செல்ல வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற தமிழக ஜவுளி தொழிலின் உண்மை நிலையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்துச் செல்ல வேண்டும். நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளி துறையை சார்ந்த அனைவரும் செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக இதே சூழ்நிலை நீடிக்கின்ற நிலையிலும் ஒன்றிய அரசு இதைப்பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. 

உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். பாதிப்பின் தீவிரத்தை உணராமல் ஒன்றிய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவில் பஞ்சு பதுக்கபட்டிருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுக்கு வராமல் நூல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்தி கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். 

தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தொழில் துறையை சார்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கு அப்புறமும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மைநிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்லவேண்டும்.

இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. உடனடியாக உங்கள் முயற்சிகளை தொடங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

click me!