என்னுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது... அதிமுகவை கலாய்த்த டி.ராஜேந்தர்!

By Asianet TamilFirst Published Mar 17, 2019, 1:54 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியது என்று லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டி.ராஜேந்தர், “வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. மக்களவைத் தேர்தல் எங்களுக்கு நிதானம்; சட்டப்பேரவைத் தேர்தல்தான் பிரதானம்” என்றெல்லாம் வசனம் பேசினார். ஆனால், திடீரென இன்று லட்சிய திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெரும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதன்பின்னர் தன் பாணியில் செய்தியாளர்களிடம் பேசினார் டி . ராஜேந்தர். “அப்பா சம்பாதித்த சொத்தை பிள்ளை அழிப்பான். அதுபோலத்தான் ஜெயலலிதா வென்று தந்த இந்த ஆட்சியை, மக்களை சந்திக்காத இந்த அரசு இன்று செய்து வருகிறது. லதிமுகவின் குறிக்கோள் சட்டப்பேரவைத் தேர்தல்தான். ஆனால், மாவட்ட செயலாளர்கள் பலரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது விருப்ப மனு வாங்கும் நிகழ்வு தொடங்கியிருக்கிறது.

 
அதிமுக சார்பில் என்னுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கூட்டணி அமைக்க முன்வந்தால், இரட்டை இலை சின்னத்தில்  கட்சியினர் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அதை என்னால் ஏற்க முடியவில்லை. அதனால் கூட்டணி சேரவில்லை” என்று தெரிவித்தார்.
டி. ராஜேந்தரின் பேட்டி மூலம் லதிமுகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. 

click me!