
காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான இறுதி தீர்ப்பை நேற்று உச்சநீதிமன்றம் வழங்கியது. அப்போது, புதுச்சேரி அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் ஏ.எஸ்.நம்பியாரின் வாதத்தை நீதிபதிகள் பாராட்டினர்.
காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் கடந்த 14ம் தேதி தாக்கல் செய்தார். அதில் சில திருத்தங்களை உச்சநீதிமன்றம் கோரியது. அதையடுத்து திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை கடந்த 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அணைகளை கண்காணிப்பது, நீரை திறந்துவிடுவது, அணைகளின் மேற்பார்வை ஆகிய அதிகாரங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்திடமே இருக்கும். சில சிக்கல்களை தீர்ப்பதற்கு மத்திய அரசை நாடலாம். ஆனால் மத்திய அரசால் காவிரி விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது. மேலும் அணைகளில் நீர் இருப்பு, திறந்துவிட வேண்டிய நீரின் அளவு ஆகிய விவரங்களை மாதந்தோறும் மாநிலங்கள், ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆணையத்தின் அதிகாரங்கள் தொடர்பாக கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் சில பரிந்துரைகளை முன்வைத்தன.
இந்த வழக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அப்போது, கர்நாடகா, கேரள அரசுகளின் பரிந்துரைகளை புறக்கணித்த நீதிபதிகள், திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை ஏற்றுக்கொண்டனர். மேலும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல், இந்த விசாரணையின் போது புதுச்சேரி அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் ஏ.எஸ்.நம்பியாரின் வாதத்தை நீதிபதிகள் பாராடினர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவு மட்டுமே இடும் அமைப்பாக இல்லாமல், உத்தரவுக்கு மாநிலங்களை இணங்க செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பாக இந்த ஆணையம் இருக்க வேண்டும் என புதுச்சேரி அரசு வழக்கறிஞர் வாதிட்டார். புதுச்சேரி அரசு வழக்கறிஞரின் இந்த வாதத்தை நீதிபதிகள் பாராட்டினர்.