இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மரண அடி கொடுத்த உச்ச நீதிமன்றம்: மாநில அரசுக்கு அதிகாரம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2020, 11:40 AM IST
Highlights

இட ஒதுக்கீடு விசயத்தில்  இந்திய மருத்துவக் கழகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் வரவேற்புக்குரியது. 

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே வழங்கலாம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரவேற்கத்தக்கது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு  நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய மருத்துவக் கழகம் தனது விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவந்து இந்த இடவொதுக்கீட்டை 3 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்தது. அதேசமயம் நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் 10 முதல் 30 விழுக்காடை ஊக்க மதிப்பெண்ணாக வழங்கலாம் என விதிமுறைகளில் கொண்டுவந்தது. இந்த மதிப்பெண்ணும் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் வழங்கப்படவில்லை.  தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் அரசு மருத்துவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். 

ஏற்கனவே தமிழக அரசு, முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான  50 விழுக்காட்டு இட ஒதுக்கீடு வழங்கி வந்தது. அது பொது சுகாதாரத்தை வலுப்படுத்த  உதவியது. எனவே அந்த நடைமுறையை மீண்டும்கொண்டு வரும்  வகையில் தமிழக அரசு உடனடியாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டம் இயற்ற வேண்டும். 

தமிழக அரசின் உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களில் 100 விழுக்காடும் தமிழக மருத்துவர்களுக்கே வழங்கபட்டு வந்தது. அதில் 50 விழுக்காடு இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மூன்றூ ஆண்டுகளுக்கு முன்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பால் 100 விழுக்காடு இடங்களும் அகில இந்திய அளவில் பகிரங்கப் போட்டிக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழக அரசின் மருத்துவ உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த  மாணவர்களுக்கான பிரத்யேக உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. 

அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடும் பறிபோய்விட்டது.  இதனால் அரசு மருத்துவர்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உதாரணத்திற்கு, இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 47 சிறுநீரக மருத்துவ இடங்களில் 2 இடங்களும், இதய மருத்துவ இடங்கள் 74 ல் 17 இடங்கள்  மட்டுமே அரசு மருத்துவர்களுக்கு கிடைத்துள்ளது. இது அரசு மருத்துவமனைகளின் சேவையையும்,அவற்றை நம்பியுள்ள ஏழை எளிய மக்களையும் பாதிக்கும்.

எனவே, இந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களில் 100 விழுக்காட்டையும் தமிழக மருத்துவர்களுக்கே வழங்க வேண்டும். அதில் 50 விழுக்காட்டை அரசு மருத்துவர்களுக்கும் 50 விழுக்காட்டை தனியார் மருத்துவர்களுக்கும் வழங்கிட வேண்டும். அதற்கேற்ப தமிழக அரசு சட்டம் கொண்டு வரவேண்டும். இட ஒதுக்கீடு விசயத்தில்  இந்திய மருத்துவக் கழகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் வரவேற்புக்குரியது. இந்திய மருத்துவக் கழகம் இட ஒதுக்கீடு விசயங்களில் மூக்கை நுழைத்தது கடும் கண்டனத்திற்குரியது. 

அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் இடங்களில் ,இதர பிற்படுத்தப்படோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்படும் குழுவிலிருந்து, இந்திய மருத்துவக் கழகத்தை நீக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இந்த இட ஒதுக்கீடை வழங்கிட விரைவாக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அரசுப் பள்ளி,அரசு உதவிபெறும் பள்ளி, உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீட்டை  நடப்பு கல்வி ஆண்டிலேயே வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!