அதிமுக கூட்டணியில் நீடிப்போமா என்று தெரியாது! பிரேமலதா விஜயகாந்த் போட்ட குண்டு!

By Selva KathirFirst Published Sep 1, 2020, 11:25 AM IST
Highlights

தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதாகவும் ஆனால் இந்தகூட்டணியில் நீடிப்போமா என்று ஜனவரி மாதம் தான் தெரியும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை ஏற்று படுதோல்வியை சந்தித்தது தேமுதிக. இதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் ஒரு தொகுதியில் கூட தேமுதிகவால் வெல்ல முடியவில்லை. இருந்தாலும் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என்று தேமுதிக காத்திருந்தது. ஆனால் ராஜ்யசபா எம்பி விஷயத்திலும் தேமுதிகவை அதிமுக கை கழுவிவிட்டது. இனி அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகே தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. எனவே இனியும் அதிமுக கூட்டணியில் நீடிப்பதால் உடனடி பலன் இல்லை என்பதை தேமுதிக உணர்ந்தே வைத்துள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உதவியாளர் செந்திலின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த பிறகு பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் அடுத்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றார். திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி கூட்டணி அரசுக்கு தான் வாய்ப்பு. இதனை பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். தற்போது தேமுதிக அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. ஆனால் தேமுதிக தொண்டர்கள் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடவே விரும்புகிறார்கள்.

எனவே டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் கூட்டணி குறித்து நாங்கள் முடிவெடுக்க உள்ளோம். தனித்து போட்டியிட்டு எங்கள் பலத்தை காட்டவே நாங்கள் விரும்புகிறோம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். கலைஞர், ஜெயலலிதா இல்லாத நிலையில் தமிழக தேர்தல் களம் ஆளுமைகள் இல்லாத தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த சூழலில் திமுகவும் சரி அதிமுகவும் சரி வலுவான கூட்டணியுடன் களம்இறங்கவே ஆர்வம் காட்டி வருகிறது. அதிமுக தற்போது கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிகவை இழக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதே போல் திமுகவும் தனது கூட்டணியில் பாமக, தேமுதிகவை இழுக்க முயற்சித்து வருகிறது.

இந்த சூழலில் தனித்து போட்டி என்று பிரேமலதா கூறியிருப்பது திமுக கூட்டணிக்கும் தயாராகவே இருக்கிறோம் என்பதற்கான வெளிப்பாடு தான் என்று சொல்கிறார்கள். மேலும் திமுக – அதிமுகவிற்கு மாற்றாக கூட்டணி அமையும் பட்சத்தில் அதில் இணையவும் தேமுதிக தயாராகவே இருக்கும் என்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் தனித்து போட்டி என்று தேமுதிக கூறியிருப்பது அதிமுக கூட்டணியில் தொடர்வோமா என்று தெரியாது என்கிற ரீதியில் உள்ளதால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!