அதிமுக – பாஜக கூட்டணியில் அதிகமாகும் பிளவு! அமைச்சர்களை எச்சரித்த ஹெச்.ராஜா! பரபர பின்னணி!

By Selva KathirFirst Published Sep 1, 2020, 11:14 AM IST
Highlights

அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூவை பகிரங்கமாக எச்சரித்ததுடன் அமைச்சர் செல்லூர் ராஜூவின் அந்தரங்க ரகசியம் குறித்து ஹெச்.ராஜா பொடி வைத்து பேசியுள்ளதாக கூட்டணியில் பிளவை அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
 

தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கூட்டணி நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பதில் உறுதியாக உள்ளது. அதே சமயம் அதிமுகவை பொறுத்தவரை பாமக, தேமுதிகவை கூட்டணியில் வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கருதுகிறது. ஆனால் பாஜகவை கூட்டணியில் வைத்துக் கொள்வது தொடர்பாக அதிமுகவில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படு தோல்வி அடையக்காரணமே பாஜக கூட்டணி தான் என்று சில தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

தேவையில்லாமல் பாஜகவை நமது தோளில் சுமக்க வேண்டியதில்லை என்பதும் மூத்த அமைச்சர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. தமிழகத்தில் வாக்கு வங்கியே இல்லாத பாஜகவை கூட்டணியில் வைத்திருப்பதால் அதிமுகவிற்கு என்ன பலன் என்றும் அதிமுகவில் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. ஆனால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் தயவு தங்களுக்கு தேவை என்பதை அதிமுகவின் மேல்மட்ட தலைவர்கள் சிலர் உணர்ந்து வைத்துள்ளனர். அதனால் தான் வாக்கு வங்கியும் இல்லை, சிறுபான்மையினர் வாக்குகளை இழந்தாலும் பரவாயில்லை என்று பாஜகவை கூட்டணியில் அதிமுக வைத்துள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக அதிமுக – பாஜக நிர்வாகிகள் இடையே வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது. கூட்டணியில் இருக்கும் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளைப்போல் இல்லாமல் எதிர்கட்சிகளின் நிர்வாகிகள் போல் அதிமுக – பாஜகவினர் பரஸ்பரம் பேசி வருகின்றனர். அதிலும் எடப்பாடி அரசை ஆண்மையற்ற அரசு என்று ஹெச்.ராஜா விமர்சித்த பிறகு நிலைமை மோசமாகியுள்ளது. தனிப்பட்ட முறையில் ஹெச்.ராஜாவை  அமைச்சர் டி.ஜெயக்குமார் மிக கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் பாஜக டெல்லிக்கு தான் ராஜா, தமிழகத்தில் இன்னும் வளராத கட்சி என்று செல்லூர் ராஜூ குண்டை தூக்கிப்போட்டார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூவின் பேச்சு பாஜக நிர்வாகிகளை ஆத்திரம் அடைய வைத்தது. இந்த நிலையில் மதுரையில் பேசிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜூ வரம்பு மீறி பேசுவதாக கூறினார். கூட்டணியில் பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர்கள் விரும்புகிறார்களா? என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியின் பின்னணியில் தான் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் கனவு.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலை போல் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் நீடித்தாலும் கணிசமான தொகுதிகளில் வெல்ல முடியுமா என்கிற சந்தேகம் பாஜகவிற்கு உள்ளது. எனவே திமுக, அதிமுகவிற்கு மாற்றாக புதிதாக ஒரு அணியை அமைத்து களம் இறங்கினால் கணிசமான தொகுதிகளை வெல்ல முடியும் என்றும் பாஜக கருதுகிறது. இதற்கு அதிமுக அல்லது திமுகவை பலம் இழக்கச் செய்வதும் முக்கியம் என்று பாஜக நினைக்கிறது. அதனால் தான் ஓபிஎஸ்சை தூண்டிவிட்டு அதிமுகவில் மீண்டும் ஒரு கலகத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

இது குறித்த சந்தேகத்தின் பேரில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மைக்காலமாக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மிக காட்டமாக பேசியதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை ஜிஎஸ்டி இழப்பீடான 12500 கோடி ரூபாயை இதுவரை தராமல் இருந்தால் எப்படி? என்று ஜெயக்குமார் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதே பாணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இப்படி பாஜக – அதிமுகவில் கீழ்மட்ட நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் மேல்மட்டத்திலும் உரசல்கள் ஆரம்பமாகியுள்ளன. மும்மொழிக்கை கொள்கையை வெளிப்படையாக எதிர்த்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையை பாஜக மேலிடம் சுத்தமாக விரும்பவில்லை என்கிறார்கள். இதனால் தங்களுக்கு எதிராக வழக்கம் போல் சிபிஐ, அமலாக்கத்துறை ஏவிவிடப்படலாம் என்று அதிமுக முக்கிய நிர்வாகிகள் தயாராகவே உள்ளதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற சூழலில் பாஜகவை உரசிப்பார்த்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்று அமைச்சர்கள் சிலர் பேச வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதனை தெரிந்து தான் அமைச்சர்கள் என்ன அர்த்தத்தில் பேசுகிறார்கள் என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். நிலைமை இப்படியே நீடிக்கும் பட்சத்தில் கூட்டணி தேர்தலுக்கு முன்பாகவே முறிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

click me!