முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
கருணாநிதிக்கு நினைவிடம்
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு நினைவிட பகுதியில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கருணாநிதி நினைவிட வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழு ஒப்புதலுக்கு அனுப்பிய நிலையில் அதற்கு அனுமதி அளித்து ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனையடுத்து கருணாநிதி நினைவிடம் அருகே உள்ள மெரினா கடலில் 137 அடி உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
கருத்து கேட்பு கூட்டத்தில் மோதல்
இதற்கான முதல் கட்ட அனுமதி கிடைத்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். கடலில் பேனா சின்னம் அமைத்தால் உடைப்பேன் என கூறியிருந்தார். இதே போல பாஜக உள்ளிட்ட ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதும் பேனா நினைவு சின்னம் அமைக்க ஆதரவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேனா சின்னத்திற்கு ஆதரவு
மொத்தமாக 34 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து கருத்து கேட்பு கூட்டத்தின் முடிவுகளை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் திருத்தம் செய்து மத்திய அரசிடம் பொதுப்பணித்துறை விரைவில் சமர்பிக்க உள்ளது.
இதையும் படியுங்கள்