திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள் மீது ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் போலீசார், அவர் நேரில் ஆஜராகும் வண்ணம் அதிரடி சம்மன் ஒன்றை அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட நடிகை விஜயலட்சுமி, சீமான் அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை அளித்த நிலையில், திருவள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியே இன்னும் அடங்காத நிலையில் ஒரு புதிய சிக்கலில் சீமான் அவர்கள் சிக்கி உள்ளார் என்று தான் கூற வேண்டும்.
கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் உறுப்பினர்கள் களம் கண்டனர். இந்நிலையில் தனது நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேனகாவுக்கு ஆதரவாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அப்பகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்... குரங்கு கையில் பூமாலை.! பாஜக அரசை விளாசும் சீமான்
அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் இருக்கின்ற அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள், துப்புரவு தொழிலுக்காக தான் ஆந்திராவில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்டார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சீமானின் இந்த பேச்சுக்கு ஆளும் திமுக உட்பட பல கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
மேலும் அந்த குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த மக்களும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பல இடங்களில் சாலை மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்தது.
இதனையடுத்து சீமானுடைய பிரச்சாரத்தை எதிர்த்து அவ்வூர் மக்கள் போலீசாரில் புகார் அளித்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த போலீசார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள், நேரில் ஆஜராக வேண்டும் என்று ஒரு சம்மனை அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு எப்போது? ஏசியாநெட்டுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!