ஒரு தொகுதியில் ஒரு உறுப்பினர் இறந்து விட்டால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்துவதா? அல்லது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேர்தல் நடத்துவதா? என சீமான் விமர்சித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மாநில கட்சிகளிடம் மத்திய அரசு ஏற்கனவே கருத்து கேட்டிருந்தது. இந்தநிலையில் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சட்டம் கொண்டு வர இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளது. இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சாதக பாதகங்களை ஆய்வு செய்து, விரைவில் சட்ட விதிகளில் மாற்றங்களை கொண்டு வரும் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கு பல்வேறு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குரங்கு கையில் பூமாலை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ஒரு தொகுதியில் ஒரு உறுப்பினர் இறந்து விட்டால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்துவதா? அல்லது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேர்தல் நடத்துவதா? ஒரு மாநில ஆட்சி கலைந்தால் மீண்டும் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவார்களா? அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்குள் மட்டும் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல உள்ளது மத்திய அரசின் நடவடிக்கை என விமர்சித்தவர், பூவின் அருமையும் தெரியவில்லை பூமாலையின் அருமையும் தெரியவில்லை என கடுமையாக சாடினார்.
தண்டச்செலவு, வெட்டிச்செலவு
தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது தேவையற்றது. கழுத்தை சுற்றி மூக்கை தொடலாமா? எனவும் கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன நடந்து விடும் என எதிர் கேள்வி கேட்டவர், எதுவும் நடக்கப்போவதில்லை. ஒரே நேரத்தில் லோக்சபா, மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்தாலே தேர்தல் செலவு குறையும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் ஒருமுறை ஆட்சி கவிழ்ந்தால் எல்லா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவது தண்டச்செலவு வெட்டிச்செலவு என்றும் சீமான் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்
One Nation One Election: ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு; விரைவில் வருகிறது சட்டம்!!