தமிழக சட்டப் பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்ந்தது …. சூலூருக்கும் சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறுமா ?

By Selvanayagam PFirst Published Mar 21, 2019, 10:01 AM IST
Highlights

தமிழக சட்டப் பேரவையில் ஏற்கனவே 21 காலியிடங்கள் இருக்கும் நிலையில் இன்று காலை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததால் காலியிடம் 22 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலோடு சூலூருக்கும் சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறுமா என் கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு  எதிராக ஆளுநரை சந்தித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மனு அளித்தனர். இதையடுத்து அவர்கள் 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை நீதிமன்றமும் ஆமோதித்தது.

இதனிடையே திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்களான  கருணாநிதியும், ஏ.கே.போசும் மரணமடைந்தனர். இதே போல் ஓசூர் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆக மொத்தம் தமிழக சட்டப் பேரவையில் 21 இடங்கள் காலியாக உள்ளன. இதில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் இருப்பதால் அவற்றில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மீதமுள்ள 18 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தான் கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ், சுல்தான்பேட்டையை அடுத்த வதம்பசேரியில் தனது தோட்டத்து வீட்டில் இன்று காலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை வரவழைத்து பரிசோதித்தபோது,  மாரடைப்பால் கனகராஜ் உயிர் பிரிந்ததை மருத்துவர் உறுதிப்படுத்தினார். இதையடுத்து கனகராஜ் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்த கனகராஜ், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்று முதல்முறையாக எம்எல்ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தமிழக சட்டப் பேரவையில் தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளுடன் சூலூர் தொகுதிக்கும் சேர்ந்து இடைத் தேர்தல் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் மரணமடைந்துவிட்ட நிலையில் உடனடியாக அவரது தொகுதிக்கு இடைத் தேர்தல் ஏப்ரல் 23 தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம்  அறிவித்தது. அதைப் போல 18 ஆம் தேதி நடைபெறவுள்ள 18 தொகுதிகளின் தேர்தலுடன் சூலூர் தொகுதி தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

click me!