தமிழ் மொழி, இனத்துக்காக ரத்தம் சிந்திய ரஜினி ஆட்சி அமைக்க வேண்டுமா..? தமிழருவி மணியனுக்கு சுப.வீரபாண்டியன் அதிரடி கேள்வி

By Asianet TamilFirst Published Nov 27, 2019, 10:47 AM IST
Highlights

விஜயகாந்த், வைகோ இருவரையும் முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்த களைப்பில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, இப்போது ரஜினியை முதல்வராக்கும் பணியில் இறங்கியுள்ளார். அகில இந்திய அளவில் சுப்பிரணியசாமி செய்யும் 'கண்ணியமான' அதே பணியை இவர் தமிழக அளவில் செய்ய முயற்சி செய்கிறார். இவ்வளவையும் அவர் எங்கே பேசுகிறார் என்றால், ‘துக்ளக்’ பொன்விழா மேடையில் பேசுகிறார்.

தமிழ் நாடு, இனம், மொழி ஆகியனவற்றிற்காக ரத்தம் சிந்தி, பாடுபட்டுச் சிறைக்குச் சென்று, பல தியாகங்களைச் செய்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தமிழருவி மணியனின் விருப்பம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.


ரஜினிக்கு ஆதரவாக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். திருச்சியில் நடந்த துக்ளக் விழாவில் பேசிய தமிழருவி மணியன் ரஜினிக்கு ஆதரவாகவும் திமுகவை விமர்சித்தும் பேசினார். என் மூச்சு அடங்குவதற்குள் தமிழகத்தில் விட்டு இரு திராவிட கட்சிகளின் ஆட்சியையும் நீக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்” என்று தமிழருவி மணியன் பேசினார். தமிழருவி மணியின் இந்தப் பேச்சுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன். இதுதொடர்பாக அவர் தனது முக நூல் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சில பத்திகள்:
 “இரண்டு நாள்களுக்கு முன், வலையொளியில் திருச்சியில், தமிழருவி மணியன் பேசியதைக் கேட்டேன். "என் மூச்சு அடங்குவதற்குள், தமிழகத்தை விட்டு இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியையும் நீக்க வேண்டும், அதுதான் என் இலட்சியம்" என்று கூறியுள்ளார். எவ்வளவு பெரிய லட்சிய வெறி! இரண்டு கட்சிகளையும் நீக்கிவிட்டு, யாருடைய ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்? தமிழ் நாடு, இனம், மொழி ஆகியனவற்றிற்காக ரத்தம் சிந்தி, பாடுபட்டுச் சிறைக்குச் சென்று, பல தியாகங்களைச் செய்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.


விஜயகாந்த், வைகோ இருவரையும் முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்த களைப்பில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, இப்போது ரஜினியை முதல்வராக்கும் பணியில் இறங்கியுள்ளார். அகில இந்திய அளவில் சுப்பிரணியசாமி செய்யும் 'கண்ணியமான' அதே பணியை இவர் தமிழக அளவில் செய்ய முயற்சி செய்கிறார். இவ்வளவையும் அவர் எங்கே பேசுகிறார் என்றால், ‘துக்ளக்’ பொன்விழா மேடையில் பேசுகிறார். தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களைப் பார்த்து, 'நீங்கள்லாம் ஆம்பிளையா?' என்று கேட்ட குருமூர்த்தியைக் கண்ணியமானவர் என்கிறார். (ஓ.பி.எஸ் ஆம்பளை இல்லையென்றால், அதனால் குருமூர்த்திக்கு என்ன பிரச்சினை?) சோவின் இடத்தை நிரப்பிவிட்டாராம் குருமூர்த்தி, சொல்வது மணியன்.
'கழகங்கள் இல்லாத தமிழ்நாடு' என்பது பா.ஜ.க.வின் முழக்கம். (ஆனால் வெட்கமில்லாமல், அதிமுகவோடு கூட்டணி). கழகங்களை ஒழிப்பதே மணியனின் உயிர் மூச்சுக்கு கொள்கை! திராவிடம் என்பதே பார்ப்பனியத்தின் இளைய பங்காளி என்பது இன்னொருவரின் (மணியரசன் ஜி) கண்டுபிடிப்பு! ஆக மொத்தம், எல்லோருக்கும் ஒரே நோக்கம்தான். அதாவது திராவிட இயக்கத்தை அழிப்பது.
திராவிட ஆட்சியில் நடந்த சாதனைகள் அனைத்தையும் திரை போட்டு மறைத்துவிட்டு, திராவிட வெறுப்பு அரசியலை இவர்கள் திட்டமிட்டு வளர்ப்பதன் நோக்கம் என்ன? தமிழ்நாட்டில் திராவிட உணர்வு இருக்கும்வரை, பார்ப்பனியம் இந்துக்களை அடிமைகளாக நடத்த முடியாது. பார்ப்பனர்களால், இந்துக்களின் கல்வி உரிமையை மறுக்க முடியாது. கோயில் கதவுகளைச் சாத்த முடியாது. பெண்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆள முடியாது. எனவே இந்த மண்ணில் பார்ப்பனியம் காலூன்ற வேண்டுமானால், திராவிடம் அழிய வேண்டும். அதற்காகத்தான், பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் ஒவ்வொரு நாளும் வேலை செய்கின்றனர். புதிய புதிய பொய்களை அவிழ்த்து விடுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், சமூக நீதி மற்றும் இடதுசாரிச் சிந்தனைகளைத் திராவிடம் ஏந்தி நிற்கிறது. அதனால்தான் அதனை அழிக்க முற்படுகின்றனர். ஆம், இன்றைய தமிழக அரசியலின் அடிப்படையே, திராவிட ஆதரவா, எதிர்ப்பா என்பதில்தான் அடங்கியுள்ளது! எந்தப் போரிலும் திராவிடம் வெல்லும்!'' என சுப. வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

click me!