எது நடக்கக்கூடாது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தோமோ அது நடந்திடுச்சு.. வேதனையில் உதயநிதி..!

By vinoth kumarFirst Published Sep 12, 2021, 6:51 PM IST
Highlights

நீட் தேர்வு வேண்டாம் என்று அனைவரும் குரல் கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசு இதில் பிடிவாதமாக உள்ளது. மாணவர் தனுஷ், நீட் தேர்வினால் தற்போது உயிரிழந்துவிட்டார்.

மாணவர்கள் தவறான முடிவு எடுக்க வேண்டாம். உங்களுடைய மருத்துவர் கனவுக்கு திமுக துணை நிற்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ரகுபதி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.10 லட்சம் நிவாரண உதவியை உதயநிதி வழங்கினார்.  

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்;- தமிழகத்தில் எது நடக்கக்கூடாது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தோமோ அந்தத் துயரம் நடந்து விட்டது. நீட் தேர்வால் ஆண்டுதோறும் குழந்தைகள் தங்கள் இன்னுயிரை இழந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். நீட் தேர்வு வேண்டாம் என்று அனைவரும் குரல் கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசு இதில் பிடிவாதமாக உள்ளது. மாணவர் தனுஷ், நீட் தேர்வினால் தற்போது உயிரிழந்துவிட்டார்.

திமுக தேர்தல் அறிக்கை மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளையும் கூடுதல் அழுத்தத்தோடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்போம். ஆட்சி அமைத்து குறுகிய காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பேன். மாணவர்கள் தவறான முடிவு எடுக்க வேண்டாம். உங்களுடைய மருத்துவர் கனவுக்கு திமுக துணை நிற்கும் என உதயநிதி கூறியுள்ளார்.

click me!