நன்கொடைகளை வாரி குவித்த மாநில கட்சிகள்... தமிழகத்தில் அதிமுக டாப்..!

By Asianet TamilFirst Published Oct 29, 2021, 8:41 PM IST
Highlights

நாட்டிலேயே மாநில கட்சிகளில் அதிக நன்கொடைகளை வசூலித்த கட்சிகளின் பட்டியலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா கட்சி முதலிடம் பிடித்திருக்கிறது. 

இந்தியாவில் அதிகமாக நன்கொடை பெற்ற மாநில கட்சிகளில் முதல் இரண்டு இடங்களை சிவசேனாவும் அதிமுகவும் பிடித்துள்ளன.

அரசியல் கட்சிகள் பெரும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரிமிருந்தும் நன்கொடைகளைப் பெற்றுதான் கட்சிகளை நடத்தி வருகின்றன. அதன்படி கட்சிகள் வசூலிக்கும் நன்கொடைகளைப் பற்றி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அதுதொடர்பான அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் ஒன்று. இந்நிலையில் கடந்த 2019 - 20-ஆம் நிதியாண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் விவரம் தெரிய வந்திருக்கிறது. டெல்லியில் உள்ள ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கட்சிகள் நன்கொடைகள் பற்றி ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில் 53 அரசியல் கட்சிகள் உட்படுத்தப்பட்டன. இதில் இரண்டே கட்சிகள் மட்டும் குறித்த நேரத்தில் தங்கள் நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 28 கட்சிகள் குறித்த நாளைத் தாண்டி 6 நாட்களில் இருந்து 320 நாட்கள் தாமதமாக  நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளன. மற்ற 23 கட்சிகள் இதுவரை அந்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கவே இல்லை.

நாட்டிலேயே மாநில கட்சிகளில் அதிக நன்கொடைகளை வசூலித்த கட்சிகளின் பட்டியலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா கட்சி முதலிடம் பிடித்திருக்கிறது. அடுத்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவும், மூன்றாம் இடத்தை டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மியும், நான்காம் இடத்தை ஒடிஷாவைச் சேர்ந்த பிஜூ ஜனதாதளமும், ஐந்தாம் இடத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் பிடித்துள்ளன. இந்த ஐந்து கட்சிகளும் இந்தக் காலகட்டத்தில் ஆளுங்கட்சிகளாக இருந்தவை.

இந்த அறிக்கையில் 2019-20 ஆண்டு காலத்தில் மாநில கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களையும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி சிவசேனா 63 கோடி ரூபாய், அதிமுக 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் அதிமுக இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கட்சிகள் பெறும் நன்கொடைகளைப் பெறும்போதும், அதுதொடர்பான நிலவரங்களை சமர்பிக்கும்போதும் பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை வழங்க வேண்டும். ஆனால், 16 மாநில கட்சிகள் 1,026 பேரிடமிருந்து பான் எண்ணை வழங்காமலேயே  25 கோடி ரூபாய் நன்கொடை வசூலைச் செய்துள்ளன. 

அண்மையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் கட்சிகள் செலவழித்த விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளன. அதில், அதிகபட்சமாக தமிழகத்தில் திமுக 114 கோடியே 11 லட்ச ரூபாயைச் செலவு செய்திருந்தது. அதிமுக 57 கோடியே 5 லட்ச ரூபாயைச் செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

tags
click me!