சொன்னால் சொன்னது தான்…! ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஓரங்கட்டிய ஸ்டாலின்

By manimegalai aFirst Published Oct 28, 2021, 9:01 PM IST
Highlights

தமிழகத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த போவது இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

சென்னை: தமிழகத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த போவது இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா என்னும் பெருந்தொற்றால் மாணவர்கள் கல்வி பயில்வதில் திடீர் இடைவெளி ஏற்பட்டு உள்ளது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வரும் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகின்றன.

பள்ளிக்கு வரவேண்டும் என்பது கட்டாயமல்ல, வருகை பதிவேடும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந் நிலையில் பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சீர் செய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய திட்டம் நேற்று மரக்காணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசு இந்த திட்டத்துக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த திட்டம் குறித்து பெரும்பாலான அரசியல் கட்சிகள் பல சந்தேகங்களை எழுப்பின.

இந் நிலையில் இந்த திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விளக்க அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த போவது இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

அந்த அறிக்கையின் விவரம் வருமாறு: மானுடம் இதுவரை சந்தித்திராத பெருந்தொற்றில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம். இந்த காலத்தில் அதிக இழப்பை சந்தித்தவர்கள் மாணவர்களே. பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்டு உள்ள கற்றல் இழப்பை ஆய்வு செய்த கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும் தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழு வல்லுநர்களும் அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை மூலமாக இல்லம் தேடிக் கல்வி திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் மாணவர்கள், கல்வியாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கற்றல் பாதிப்பை குறைக்க, அவற்றை சரி செய்ய எந்த மாநிலமும், செயல்படுத்தாத இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் தன்னார்வலர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி செயல்படுத்தப்படும். திட்டத்தில் 86,550 பேர் சேவையாற்ற பதிவு செய்திருக்கின்றனர்.

பதிவு செய்தவர்களின் கல்வித்தகுதி, இருப்பிடம், முன் அனுபவம் போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். பள்ளி மேலாண்மை குழுவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவர். தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

ஆனால் இந்த திட்டம் குறித்து ஊடகங்கள் வாயிலாக மாற்றுக் கருத்துகள் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பெற்றது. அதை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கும் முறை, அவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும்.

ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த போவது இல்லை என்று பலமுறை தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. மாநில அளவிலான கல்வி கொள்கையை வகுத்திட கல்வியாளர் கொண்ட குழு விரைவில் அமைக்கப்படும்.

எனவே இந்த திட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, அனைத்து தரப்பு மக்களும் இந்த திட்டத்தை ஆதரித்து மாணவ செல்வங்களை ஆதரித்து, அரசு பள்ளிகளை வலுப்படுத்திட கைகோர்த்திட வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

click me!